
கோத்தா பாரு, செப்டம்பர்-30,
கிளந்தானில் டெலிகிராம் செயலி வாயிலாக பாலியல் சேவை வழங்கியதாகக் கூறப்படும் 15 வயது பெண் பிள்ளை, தற்போது சமூக நலத்துறையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
வயது, குடும்ப பின்புலம், பாதுகாப்பு மற்றும் ஆலோசகச் சேவைக்கான தேவை ஆகிய அம்சங்களைக் கருத்தில் கொண்டு அம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கிளந்தான் போலீஸ் தலைவர் Yusoff Mamat அதனைத் தெரிவித்தார்.
கடும் உளைச்சலுக்கு ஆளாகி, மனப் போராட்டங்களைச் சந்தித்தப் பிறகே, அப்பெண் பாலியல் சேவை வழங்கும் அளவுக்கு துணிந்தது, தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பெற்றோர் விவாகரத்து பெற்றதிலிருந்து தந்தையுடன் பாசீர் பூத்தேவில் அப்பெண் வசித்து வந்துள்ளார்.
அப்பிள்ளையின் இக்கட்டானச் சூழலைப் பயன்படுத்தி, யாரோ அவருக்கு டெலிகிராம் வழியாக பாலியல் சேவை வழங்குவது பற்றியும் வாடிக்கையாளர்களைத் தேடுவது பற்றியும் கற்றுக் கொடுத்திருக்கும் சாத்தியத்தையும் போலீஸ் மறுக்கவில்லை.
எனவே, இச்சம்பவத்தை வெறும் குற்ற அம்சத்தோடு அணுகி விட முடியாது; மாறாக, முழுமையான மறுவாழ்வு அணுகுமுறை அவசியமென Yusoff கூறினார்.
டெலிகிராம் வாயிலாக தாம் பாலியல் சேவை வழங்கி வருவதாக, தனது மூத்த மகள் தன்னிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாகக் கூறி, 43 வயது முன்னதாக போலீஸில் புகார் செய்த போது இவ்விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.