
ஜோகூர் பாரு, மார்ச்-10 – சனிக்கிழமை மாலை ஜோகூர் பாருவில் உள்ள பிரபல பேரங்காடியொன்றில் மக்கள் பரபரப்பாக பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த நேரத்தில், இரண்டாவது மாடியின் உட்கூரை திடீரென சரிந்து விழுந்தது.
காங்கிரீட் பாகங்கள் கீழ் தளத்திலிருந்த கியோஸ்க் (kiosks) தானியங்கி இயந்திரங்கள் மற்றும் கடைகள் மீது விழுந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சிலிங் கூரை சரிந்து விழும் காட்சிகள் அடங்கிய 50-வினாடி வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
காங்கிரீட் இடிபாடுகளிலிருந்து நீண்டுகொண்டிருந்த இரும்பு கம்பிகளும், பாதிக்கப்பட்ட கடைகளுக்கு ஏற்பட்ட சேதங்களும், வைரலான அந்த டிக் டோக் வீடியோவில் தெரிகிறது.
கூரையின் ஒரு பெரிம் பகுதி இடிந்து விழுந்ததில், பின்னிக் கொண்ட நிலையில் உலோகம் கியோஸ்களின் மேல் ஆபத்தான முறையில் தொங்கியது.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், பயங்கர சத்தத்துடன் கூரை இடிந்து விழுந்ததாகவும், உடனடியாக கடைக்காரர்களும் பொது மக்களும் அங்கிருந்து அலறிக் கொண்டே பதறியோடியதாகவும் கூறினர்.
அச்சம்பவத்தில் யாரும் காயமடைந்தார்களா எனத் தெரியவில்லை; அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியாகவில்லை.
சம்பவம் நடந்த கையோடு, மேலும் ஆபத்துகளைத் தடுக்க, பேரங்காடி பாதுகாப்புக் குழு அப்பகுதியை மூடியது.
வீடியோவைப் பார்த்த வலைத்தளவாசிகள், பேராங்காடிகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து கவலைத் தெரிவித்தனர்.
இதுபோன்ற சம்பவம் எப்படி நடக்கும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
பேரங்காடி நிர்வாகம் இன்னும் கருத்துரைக்கவில்லை:
ஆனால் எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.