
கோலாலாம்பூர், ஜூலை-18- பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை பதவி விலக வலியுறுத்தி ஜூலை 26-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ‘Turun Anwar’ பேரணியில் 10,000 முதல் 15,000 பேர் வரை பங்கேற்பார்கள் என, போலீஸ் கணித்துள்ளது.
அப்பேரணி குறித்து டாங் வாங்கி போலீஸ் நியலையத்திடம் ஏற்பாட்டாளர்கள் முறைப்படி தெரியப்படுத்தியிருப்பதாக, கோலாலம்பூர் போலீஸ் இடைக்காலத் தலைவர் டத்தோ மொஹமட் உசுஃப் ஜான் மொஹமட் ( Mohamed Usuf Jan Mohamad) தெரிவித்தார்.
இதையடுத்து அந்த அமைப் பேரணி சுமூகமாகவும், பங்கேற்பாளர்களுக்கும் பொது மக்களுக்கும் பாதுகாப்பானதாகவும் இருப்பதை உறுதிச் செய்ய, 2,000 போலீஸ் வீரர்கள் பணியில் அமர்த்தப்படுவர்.
இயன்றவரை பேரணி எந்தவொரு பிரச்னையும் இல்லாத வகையில் நடைபெறுவதை போலீஸ் உறுதிச் செய்யுமென அவர் சொன்னார்.
பங்கேற்பாளர்களும், எந்தவொரு சினமூட்டும் நடவடிக்கையிலும் ஈடுபடாமல் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென உசுஃப் கேட்டுக் கொண்டார்.
விதிமுறைகளை மீறி யாராவது நடந்துகொண்டால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் எச்சரித்தார்.
4 இடங்களில் காலை 11 மணி தொடக்கம் ஒன்றுகூடி, அங்கிருந்து பிற்பகல் 2 மணிக்கு மெர்டேக்கா சதுக்கம் நோக்கி பங்கேற்பாளர்கள் ஊர்வலமாகச் செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், தற்போது வரை சாலைகளை மூடும் திட்டமேதும் இல்லை; ஆனால், கடைசி நேர நிலவரங்களைப் பொறுத்து அதில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றார் அவர்.