
கோலாலம்பூர், ஜூலை-27 – கோலாலம்பூரில் எதிர்கட்சியினர் நடத்திய ‘Turun Anwar’ பேரணியால் அரசாங்கத்துக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை.
மாறாக, ஒரு காலத்தில் சர்வாதிகார ஆட்சியாளர்களால் ஒடுக்கப்பட்ட ஜனநாயக உரிமையை மக்களுக்கு மீட்டுத் தரும் அரசியல் கலாச்சார மாற்றத்தின் அடையாளமாகும்.
இதுவே மடானி மாடலின் பக்குவப்பட்ட ஜனநாயகத்தின் சான்று என பி.கே.ஆர் கட்சியின் தொடர்பு பிரிவு இயக்குநர் அடாம் அட்லி (Adam Adli) வருணித்துள்ளார்.
பாதுகாப்புப் படையின் எந்தவோர் அடக்குமுறையுமின்றி எதிர்கட்சியினரும் அவரின் ஆதரவாளர்கலும் தலைநகரில் பேரணி நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை அரசு நிர்வாகத்தின் பலவீனமாகப் பார்க்கக் கூடாது; மாறாக, ஜனநாயகத்தின் உண்மையான வலிமையாகக் கொண்டாட வேண்டுமென, இளைஞர் – விளையாட்டுத் துறை துணையமைச்சருமான அடாம் அட்லி சொன்னார்.
முன்பு, கருத்து முரண்பாடுகள் குற்றமாக முத்திரைக் குத்தப்பட்டு மக்களின் குரல்கள் நசுக்கப்பட்டு, பேரணிகள் ‘தாக்கப்பட்ட’ இதே நாட்டில், இன்று இந்த மடானி அரசாங்கத்தின் கீழ் அரசு எதிர்ப்புப் பேரணிகள் அனுமதிக்கப்படுகின்றன.
ஜனநாயகத்தின் மாண்பை மடானி மதிப்பை இதைத் எடுத்துரைப்பதாக அடால் அட்லி பெருமிதம்
தெரிவித்தார்.
முன்னாள் பிரதமரும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவருமான தான் ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையில் நடைபெற்ற இந்த ‘Turun Anwar’ பேரணி எந்தவோர் அசம்பாவிதமும் இன்றி அமைதியாக நடைபெற்று முடிந்தது.