
பெய்ஜிங், ஏப்ரல்-10, அதிரடி திருப்பமாக, சீனாவைத் தவிர மற்ற அனைத்து 75 நாடுகளுக்கும் விதிக்கப்பட்ட கூடுதல் வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதனால் 24 விழுக்காட்டு ‘பரஸ்பர’ வரி விதிக்கப்பட்ட மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கான வரி விகிதம் பழையபடி 10 விழுக்காட்டுக்கே திரும்புகின்றது.
இந்த இடைப்பட்ட காலத்தில் பேச்சுவார்த்தைகளுக்கு அதிபர் டோனல்ட் டிரம்ப் இடம் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவைப் போல் ‘அகந்தை’ காட்டாமல் ‘பணிவோடு’ நடந்துகொண்டதோடு, பேச்சுவார்த்தைக்கும் இசைவு காட்டியதால் அந்த 75 நாடுகளுக்கும் அமெரிக்கா கரிசனம் காட்டுவதாக டிரம்ப் சொன்னார்.
எந்தச் சூழலிலும் பின்வாங்க மாட்டேன் என ‘கர்ஜித்த’ டிரம்ப்பின் இம்மனமாற்றம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
என்றாலும் சீனாவின் பிடிவாதத்தால் டிரம்ப் கோபத்தின் உச்சத்திலிருப்பது தெளிவாகத் தெரிகிறது.
“104 விழுக்காட்டோடு வரியை நிறுத்தலாம் என நினைத்தேன்; ஆனால் உலகச் சந்தைக்கு சீனா காட்டி வரும் ‘அவமரிதையால்’ உடனடியாக 125 விழுக்காட்டுக்கு உயர்த்துகிறேன்” என டிரம்ப் அறிவித்தார்.
என்றாவது ஒரு நாள் சீனா தன் தவற்றை உணரும் என டிரம்ப் கூறிக் கொண்டார்.
முன்னதாக,
அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு இன்று முதல் 84 விழுக்காட்டு வரி விதிக்கப்படுமென சீனா அறிவித்தது.
இதற்கு முன் 34 விழுக்காட்டு வரியை அறிவித்திருந்த பெய்ஜிங், அமெரிக்காவுக்கு பதிலடியாக அதனை 50 விழுக்காடு அதிகரித்தது.
இது தவிர, அமெரிக்காவின் 12 அமைப்புகளை ஏற்றுமதி கட்டுப்பாட்டுப் பட்டியலில் சீனா சேர்த்துள்ளது.
மேலும் 6 நிறுவனங்கள் “நம்பகத்தன்மை இல்லாத அமைப்புகள்” பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.
வியாழக்கிழமை தொடங்கி சீனப் பொருட்களுக்கு 104 விழுக்காட்டு வரி அமுலுக்கு வருவதாக, நேற்று வெள்ளை மாளிகை அறிவித்த நிலையில், சீனா இப்புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இப்படியாக அமெரிக்காவும் சீனாவும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் அல்ல என்பதை நிரூபித்து வரும் நிலையில், இரு நாடுகளின் ஏற்றுமதியாளர்களும் அடுத்து என்ன நடக்குமோ என விழிபிதுங்கி கிடக்கின்றனர்.