வாஷிங்டன், நவ 15 – UFO எனப்படும் வேற்று கிரகவாசிகள் குறித்து கடந்த ஆண்டு 700க்கும் மேற்பட்ட அறிக்கைகள் பெறப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சு மற்றும் தேசிய உளவு நிறுவனத்தின் இயக்குனர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடையாளம் காணப்படாத முரண்பாடான நிகழ்வு அறிக்கை, 757 புதிய சம்பவங்களை பட்டியலிட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதத்திற்கிடையே 485 நிகழ்வுகள் நிகழ்ந்தன, 2021 மற்றும் 2022 ஆண்டுகளில் மேலும் 272 சம்பவங்கள் தெரிவிக்கப்படவில்லையென அறிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு அறிக்கையின் மறுஆய்வு காலத்தில் வேற்று கிரக வாசிகள் குறித்து 281 புதிய அறிக்கைகளை மட்டுமே அமெரிக்க தற்காப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த ஆண்டு இது குறித்த அறிக்கைகள் அதிகரித்ததற்கு இதுபோன்ற சம்பவங்களைப் புகார் அளிப்பதில் ஏற்பட்ட பரந்த விழிப்புணர்வு காரணமாக இருக்கலாம் என்று அமெரிக்க தற்காப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்களை ஆய்வு செய்யும் ஆல்-டொமைன் அனோமலி ரெசல்யூஷன் அதிகாரி ( All -Domain Anomaly Resolution (AARO), ) மொத்தம் 1,652 பொருட்கள் தொடர்பில் புகார் அளித்துள்ளார். 2024 அறிக்கையில் குறிப்பிட்ட சில நிகழ்வுகளை அதிகாரிகளால் விளக்க முடியவில்லை என்றாலும், வேற்று கிரக உயிர்கள் அவற்றிற்கு காரணம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லையென்றும் கூறப்பட்டது. வேற்று கிரகவாசிகள், அவற்றின் செயல்பாடுகள் அல்லது தொழில்நுட்பம் பற்றிய எந்த ஆதாரமும் இல்லை என்று விஞ்ஞானிகள் இந்த ஆண்டு ஒரு அறிக்கையில் எழுதியுள்ளனர். ஒரு சிறிய எண்ணிக்கையிலான சம்பவங்கள் நிலப்பரப்பு நிகழ்வுகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம், ஆனால் இன்னும் பல ஆய்வுகள் தொடரும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.