
புத்ரா ஜெயா, மார்ச் 17 – நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து மலேசிய தேசிய பல்கலைக்கழக சிறப்பு குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதுகுத் தண்டு பிரச்சினைகள் உள்ள குழந்தைகள், வேறு நிபுணர்களிடம் பரிந்துரைக்கப்படுவார்கள்.
யு.கே.எம் (UKM) பல்கலைக்கழகத்திடமிருந்து இந்த விவகாரம் குறித்து உயர்க்கல்வி அமைச்சு விரிவான அறிக்கையைப் பெற்ற பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஷம்ரி அப்துல் காதிர் ( Zamri Abdul Kadir ) தெரிவித்தார்.
இடைநீக்கம் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை நிபுணர் இல்லாத நிலையில் நோயாளிகளுக்கு தொடர்ச்சியான பராமரிப்பு வழங்குவதை உறுதி செய்ய மருத்துவமனை ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது என்று அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொடர்புடைய துறைகளில் உள்ள பிற நிபுணர்களிடம் பரிந்துரைக்கப்படுவார்கள் என்பதோடு ஏற்கனவே இது தொடர்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஷம்ரி தெரிவித்தார்.
உயர்கல்வி அமைச்சில் நடைபெற்ற Ihya Ramadan நிகழ்ச்சியில் , பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்ட பிறகு, செய்தியாளர்களிடம் பேசியபோது ஷம்ரி இத்தகவலை வெளியிட்டார்.
முதுகுத் தண்டுவடக் கோளாறுகள் உள்ள 17 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டிருந்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து ஜனவரி 10 ஆம் தேதி இடைநீக்கம் செய்யப்பட்டதாக இதற்கு முன்னதாக தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக அந்த நிபுணருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகு, முதுகுத் தண்டுவடக் கோளாறுகள் உள்ள குழந்தைகளின் குடும்பங்களிடையே கவலைகளை ஏற்படுத்தியது.