![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2025/01/MixCollage-03-Jan-2025-10-17-AM-7966.jpg)
பெட்டாலிங் ஜெயா, ஜனவரி-3, மலாயாப் பல்கலைக் கழகத்தில் பூனைகள் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு காரணமானவர்களை அடையாளம் காண உதவுவோருக்கு, 10,000 ரிங்கிட் சன்மானம் வழங்கப்படும்.
SPCA எனப்படும் சிலாங்கூர் விலங்குகள் நல ஆர்வலர் சங்கம் அதனை அறிவித்துள்ளது.
அதுவொரு கொடூரமான செயல் மட்டுமல்ல, 2015 விலங்குகள் நல சட்டத்தின் கீழ் கடும் குற்றமாகுமென, அச்சங்கத்தின் தலைவர் Christine Chin தெரிவித்தார்.
ஒரு பாவமும் அறியாத அந்த பூனைகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்; எனவே தகவல் தெரிந்தோர் முன்வந்து விசாரணைக்கு உதவிட வேண்டும்.
இந்த ஒரு முறை குற்றவாளிக்குத் தக்க தண்டனை வாங்கித் தந்தால் தான், வரும் காலங்களில் இதுபோன்ற மிருகவதையைத் தடுக்க முடியுமென்றார் அவர்.
பூனைகளின் மர்ம மரணங்களுக்கு உண்மைக் காரணம் இன்னும் தெரியவில்லை என்றாலும், பாகுபாடின்றி விரிவான விசாரணைக்காக அவசியத்தை இச்சம்பவங்கள் உணர்த்தியுள்ளன.
மனிதர்களால் ஏற்பட்டதா அல்லது பிராணிகளுக்கு இடையில் மூண்ட மோதலால் விளைந்ததா என எதுவாக இருந்தாலும், மீண்டும் இப்படி நடக்கக் கூடாது என்பதே முக்கியம்.
அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென, அறிக்கையொன்றில் Christine கூறினார்.
மலாயாப் பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்கனவே 5 பூனைகள் கொடூரமான முறையில் இறந்துகிடந்த நிலையில், புதிதாக அங்குள்ள உடற்பயிற்சி மையத்திற்கு அருகே மேலுமொரு பூனையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
பூனைகள் மட்டுமின்றி ஒரு நாயும் அதே போல் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பதாக, மலாயாப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.