
பெட்டாலிங் ஜெயா, ஜனவரி-11 – யு.பி.எஸ்.ஆர் மற்றும் பிடி 3 தேர்வுகளை மீண்டும் அமுல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை, கல்வியமைச்சர் ஃபாட்லீனா சிடேக்கிடம் வலியுறுத்தப் போவதாக தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் ஆர். யுனேஸ்வரன் கூறியுள்ளார்.
மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு இத்தகையப் பொதுத் தேர்வுகள் அவசியமாகும்.
எனவே தான், அவற்றை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகள் பரவலாக எழுந்துள்ளன.
இந்நிலையில், வரும் செவ்வாய்க்கிழமை ஃபாட்லீனாவைச் சந்திக்கும் போது இவ்விவகாரம் குறித்து பேசுவேன் என்றார் அவர்.
SMC எனப்படும் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் பிரம்மாஸ்திரா இணையக் கல்வித் தளத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய போது யுனேஸ்வரன் அவ்வாறு சொன்னார்.
கல்வியின் வாயிலாகவே ஏழ்மையை ஒழிக்க முடியும் என்றும், 60,000-க்கும் மேற்பட்ட பட்டதாரிகளை உருவாக்கிய ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்துடன் துணையமைச்சராக இணைந்து செயல்படுவேன் என்றும் யுனேஸ்வரன் உறுதியளித்தார்.
SMC தோற்றுநரான ‘கல்வித் தந்தை’ தான் ஸ்ரீ தம்பிராஜாவின் கல்வி பாரம்பரியம், மலேசியாவின் கல்வி துறையில் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது என்றார் அவர்.
இவ்வேளையில், இந்த பிரம்மாஸ்திரா இணையக் கல்வித் தளம், தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே பெரும் கல்வி புரட்சியை ஏற்படுத்தும் என SMC தலைமை இயக்குநர் சுரேன் கந்தா நம்பிக்கைத் தெரிவித்தார்.
தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத்துடன் செய்துகொள்ளப்பட்ட புதிய ஒப்பந்தத்தின் படி, இந்த தளம் தற்போது 11 மாநிலங்களில் உள்ள 528 தமிழ்ப்பள்ளி மாணவர்களை சென்றடையும் என்றார் அவர்.
கோவிட்-19 பெருந்தொறு காலத்திற்கு முன்பே அமரர் தான் ஸ்ரீ தம்பிராஜா உருவாக்கிய இத்தளம், மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு பெரும் அடித்தளமாக இருந்து வருவதை அவர் சுட்டிக் காட்டினார்.
ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் தனது 44-ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி, 2026 கல்வி தவணையை ஸ்கந்த வேள்வி என்ற தாரக மந்திரத்துடன் தொடங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.



