
கெளுகோர், டிசம்பர்-28 – பல்கலைக்கழக மாணவர்களே இந்தத் தலைமுறையின் ‘தளபதிகள்’ என, மஹிமா எனப்படும் மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையின் தலைவர் டத்தோ என். சிவகுமார் வருணித்துள்ளார்.
அவர்கள் தான் எதிர்காலத் தலைவர்கள்.
பட்டப்படிப்புக்கு மத்தியில் பல்வேறு சவால்களுக்கு இடையில் மொழி, கலை, கலாச்சாரம் வளர்க்கவும் அவர்கள் அயராது உழைக்கின்றனர்.
ஆனால், அதிகாரத்தில் இருப்பவர்களிடமிருந்தும் செல்வாக்குப் பெற்றவர்களிடமிருந்தும் மாணவர்களின் நிகழ்ச்சிகளுக்கு போதிய ஆதரவில்லை என சிவகுமார் குறைப்பட்டுக் கொண்டார்.
உண்மையான தலைமை என்பது, எதிர்காலத்தை வடிவமைக்கும் இளைஞர்களை வலுப்படுத்துவதே என, நேற்று பினாங்கு மலேசிய அறிவியல் பல்கலைக்கழகமான USM-மில் நடைபெற்ற ‘தமிழோடு விளையாடு 4.0’ புதிர்போட்டியை தொடக்கி வைத்து பேசுகையில் அவர் சொன்னார்.

USM இந்தியக் கலாச்சார சங்கம் ஏற்பாடு செய்த இந்த ஆண்டு விழாவில், 7 பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று, தமிழ் இலக்கணம், இலக்கியம், பண்பாடு ஆகியவற்றில் தங்கள் அறிவை வெளிப்படுத்தினர்.
“அகரம் முதல் னகரம் வரை” என்ற தலைப்பில் நடைபெற்ற போட்டி, முழுக் கற்றலின் அழகை எடுத்துக்காட்டியது.
மாணவர்கள் HEBAT — Holistic, Balanced, Articulate, Thinking — என்ற மதிப்புகளை தாங்கி, அறிவும் இதயமும் இணைந்த தலைமுறையை பிரதிபலித்தனர்.
ஏற்பாட்டுக் குழுவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, ‘ஒற்றுமையே பலம்’ என்ற செய்தியையும் சிவகுமார் வலியுறுத்தினார்.
வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை அவர் எடுத்து வழங்கினார்.
சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர்.





