கோலாலம்பூர், நவம்பர்-18- PLUS நெடுஞ்சாலையின் 259-வது கிலோ மீட்டரில் முக்கியப் புள்ளியின் (VIP) பாதுகாப்புக்காக உடன் சென்ற போலீஸ் வாகனம், புரோட்டோன் சாகா காரை மோதியச் சம்பவம் விசாரிக்கப்படுகிறது.
சிரம்பான் அருகே சனிக்கிழமை நிகழ்ந்து சமூக ஊடகங்களில் வைரலான அவ்விபத்து குறித்து புகார் பெறப்பட்டிருப்பதை, புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமுலாக்கத் துறை உறுதிப்படுத்தியது.
சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் இருந்தால், முன்வந்து விசாரணைக்கு உதவுமாறு அத்துறையின் இயக்குநர் டத்தோ ஸ்ரீ மொஹமட் யுஸ்ரி ஹசான் பஸ்ரி (Datuk Seri Mohd Yusri Hassan Basri) கேட்டுக் கொண்டார்.
மழையின் போது வேகமாகச் சென்ற போலீஸ் வாகனம் புரோட்டோன் சாகா காரின் பின்னால் மோதுவதை, ஞாயிற்றுக்கிழமை வைரலான 1 நிமிட 4 வினாடி வீடியோவில் காண முடிகிறது.
மோதிய வேகத்தில், காரோட்டி அதிர்ச்சியில் கத்துவதும், குழந்தை பயத்தில் அலறுவதையும் கேட்க முடிகிறது.
சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கானோர் அவ்வீடியோவை பகிர்ந்த நிலையில், மழையில் இப்படித் தான் வேகமாக காரோட்டுவதா என ஏராளமானோர் அந்த போலீஸ் வாகனத்தை கடிந்துகொண்டனர்.