Latestமலேசியா

கெடாவில் பொதுவிடுமுறைக்கான அதிகபட்ச வரம்பு முடிந்துவிட்டது; தைப்பூசத்திற்கு நிரந்தர பொதுவிடுமுறை கிடையாது – சனுசி

அலோர்ஸ்டார், ஜன 5 – கெடாவில்  ஆண்டு பொதுவிடுமுறைக்கான அதிகபட்ச வரம்பு முடிந்துவிட்டதால் தைப்பூசத்திற்கு நிரந்தர ஆண்டு பொதுவிடுமுறையை வழங்கும்படி விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக அம்மாநில மந்திரிபுசார் சனுசி நோர் தெரிவித்திருக்கிறார்.  

கெடாவில் ஆண்டு பொது விடுமுறைக்கான கூடியபட்ச வரம்பு முடிந்துவிட்டதால் தைப்பூசத்திற்கு நிரந்தர ஆண்டு பொது விடுமுறையை நிர்ணயிக்கும்படி MIPP எனப்படும் மலேசிய இந்தியர் மக்கள் கட்சியின் துணைத்தலைவர் S. சுப்ரமணியம் விடுத்த கோரிக்கை ஏற்கப்படாது என அவர்  கூறினார். 

எனினும் கெடாவுக்கான பொது விடுமுறையின் எண்ணிக்கை குறித்து சனுசி நோர் தகவல் வெளியிட மறுத்துவிட்டதோடு ஏற்கனவே கூடியபட்ச பொதுவிடுமுறை வழங்கப்பட்டு விட்டதாக மட்டும் தெரிவித்திருக்கிறார்.  

நாம் எப்போதும்  கூடுதல் விடுமுறை பெறுவது குறித்து ஏன் நினைக்க வேண்டும். தொழில் நடத்துவோர் அதிகமான விடுமுறையால் மகிழ்ச்சியடையவில்லை. போய் வேலை செய்யுங்கள். பல மாநிலங்களில் தைப்பூசத்திற்கு விடுமுறை கொடுக்கப்படுவதில்லை என்று சனுசி நோர் சுட்டிக்காட்டினார்.  

ஒவ்வொரு முறையும் தைப்பூசம் வரும்போது, பொதுவிடுமுறை பற்றி விவாதிக்க வேண்டியுள்ளது. இது மாநிலத்தில் உள்ள முஸ்லிம் அல்லாதோர்களின் விவகாரத்தை மாநில அரசாங்கம் கையாளும் விதத்தையும் விவாதிக்க வைப்பதாக சுப்ரமணியம் கூறியுள்ளார்.

கோலாலம்பூர், புத்ராஜெயா, சிலாங்கூர், பினாங்கு,பேரா, நெகிரி செம்பிலான், ஜோகூரில் தைப்பூசத்திற்கு  நிரந்தர ஆண்டு பொதுவிடுமுறை வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!