
கோலாலம்பூர், ஆகஸ்ட் 25 – வாகன வகை ஒப்புதல் சான்றிதழ் (VTA) பெறாத மூன்று சக்கர வாகனங்கள் இனி நாட்டின் எந்தச் சாலையிலும் பயன்படுத்த அனுமதிக்கப்படாது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் சியூ ஃபூக் தெரிவித்துள்ளார்.
பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட பல காரணிகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் சிறு தொழில் வியாபாரிகளின் விவசாயப் பொருட்கள் அல்லது பிற தேவைகளுக்காக மூன்று சக்கர வாகனங்களைப் பயன்படுத்த விரும்பினால், போக்குவரத்து அமைச்சு (MoT) அதற்கான உதவிகளை வழங்க தயாராக உள்ளதீணாவும் அவர் தெரிவித்தார்.
புதிய மாடல்களில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டியிருந்தாலும், அவற்றுக்கான VTA ஒப்புதல் பெறும் நடைமுறைகளில் சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) முழுமையான விளக்கமும் தொழில்நுட்ப உதவியும் வழங்கவுள்ளது.
மேலும் VTA பெறாத வாகனங்களை பயன்படுத்தினால் அதனால் ஏற்படும் ஆபத்துகள் அனைத்தையும் பயனாளி தானே ஏற்க வேண்டும் என்றும் சட்டத்துக்கு இணங்காததால், காப்பீட்டு பாதுகாப்பு, சாலை வரி செலுத்துதல் உள்ளிட்ட பல நன்மைகளையும் இழக்க நேரிடும். என்றும் அறிவிக்கப்பட்டது.
அதே சமயம், பாதுகாப்பு அம்சங்கள் உறுதி செய்யப்படாத வாகனங்களை அனுமதித்து விபத்து நிகழ்ந்தால், அதற்கான குற்றச்சாட்டை அரசாங்கம் ஏற்க வேண்டிய சூழ்நிலையை நாம் தவிர்க்க வேண்டும் என்றும் லோக் தெளிவுபடுத்தினார்.