
லண்டன், அக்டோபர்-6, நிரந்தர மனித வாழ்விடங்களை கொண்டிராத ஒரே கண்டமான அண்டார்டிகா பனிப்பிரதேசத்தில், பனிப்பாறைகள் பச்சை நிறமாக மாறி வருவது கண்டறியப்பட்டுள்ளது.
40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, அங்கு பல இடங்களில் அந்த பச்சை நிற பாசிகள் படர்ந்துள்ளன.
விண்வெளியிலிருந்து பார்க்கக்கூடிய அளவுக்கு அவை மிகவும் செழிப்பாக அடர்ந்து வளர்ந்து வருகின்றன.
ஏன் எதனால் பனிப்பாறைகள் பச்சை நிறமாக மாறுகிறது என்ற ஆராய்ச்சியில் இறங்கிய பிரிட்டன் விஞ்ஞானிகள், புவி வெப்பமயமாதல் காரணமாக அண்டார்டிகா அதன் தன்மையிலிருந்து மாறுவதாகக் கூறுகின்றனர்.
நாளுக்கு நாள் அதிகமாகும் வெப்பநிலை மாற்றத்தால் பனிக்கட்டிகள் உருகி ஓடும் தடங்களில் எல்லாம் பாசிகள் வேகமாகப் படருகின்றன.
இருண்ட மேற்பரப்புகள் அதிக வெப்பத்தை உறிஞ்சும் என்பதால், இந்த பச்சை நிறமானது, சூரியக் கதிர்வீச்சை மீண்டும் விண்வெளியில் பிரதிபலிக்கும் நிலத்தின் திறனைக் குறைக்கலாம்.
வெப்பமயமாதல் குறைவதற்கான அறிகுறி இப்போதைக்கு இல்லையென்பதால், அண்டார்டிகாவில் அந்த பாசிகளின் ‘வளர்ச்சியை’ தடுக்க முடியாது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இச்செய்தியைப் பார்த்த வலைத்தளவாசிகள், இது நிச்சயமாக உலகம் அழியப் போவதற்கான அறிகுறியே என நகைச்சுவையாக கருத்து பதிவேற்றி வருகின்றனர்.