
கோலாலம்பூர், பிப்ரவரி-19 – வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கெடுப்பதற்கான செலவு குறித்து வங்காளதேசம், இந்தியா, நேப்பாளம், இலங்கை ஆகிய நாடுகளுடன், அரசாங்கம் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
வியட்நாம், கம்போடியா மற்றும் இந்தோனேசியாவிலிருந்து வெளிநாட்டு தொழிலாளர்களை பணியமர்த்துவதற்கான செலவு இறுதிச் செய்யப்பட்டு விட்டதாக, மனித வள துணை அமைச்சர் டத்தோஸ்ரீ அப்துல் ரஹ்மான் முஹமட் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைகளை இறுதிச் செய்வதில், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்புகளுக்கும் பயனளிக்கும் கூறுகள் இருப்பதை அரசாங்கம் உறுதிச் செய்யும்.
அனைத்துலக தொழிலாளர் அமைப்பான ILO பரிந்துரைத்த படி, நியாயமான ஆட்சேர்ப்பு நடைமுறைகளுக்கு அப்பேச்சுவார்த்தைகள் முன்னுரிமை அளிக்கும் என்றார் அவர்.
செலவு நிர்ணயம் என்பது தொழிலாளர்களை ஏற்றுமதி செய்யும் நாட்டுக்கும், இறக்குமதி செய்யும் நாட்டுக்கும் இடையிலான கூட்டு கடப்பாடாகும்.
எனவே, செலவு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை உறுதிச் செய்ய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை இரு நாடுகளிலும் கண்காணிக்க வேண்டுமென மக்களவையில் அவர் சொன்னார்.
இதனிடையே, நாட்டில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான பணி காலத்தை நீட்டிக்கும் திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என்று அப்துல் ரஹ்மான் கூறினார்.
நாட்டின் தொழிலாளர் சந்தையை மறுசீரமைப்பதன் மூலம் வெளிநாட்டு தொழிலாளர்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றார் அவர்.