
ஈப்போ, பிப்ரவரி-9-நாட்டில் அனுமதியில்லாமல் கட்டப்பட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் சட்டப்பூர்வமாக்கும் நடவடிக்கைக்கு உதவத் தயார் என, வீடமைப்பு – ஊராட்சித் துறை அமைச்சான KPKT அறிவித்துள்ளது.
நில விவகாரம் மாநில அரசுகளின் அதிகாரங்களுக்கு கீழ் வருகிறது;
என்றாலும் நல்லிணக்க அடிப்படையில் ஊராட்சி மன்றங்கள் வாயிலாக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளுடன் ஒத்துழைத்து, உரியத் தீர்வு காண தயாராக இருப்பதாக அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்தார்.
மசூதியோ, தேவாலயமோ, இந்து அல்லது சீனக் கோவிலோ எதுவாக இருந்தாலும், அவற்றின் கட்டுமானங்களுக்கு ஊராட்சி மன்றங்களின் அனுமதி தேவையாகும்; அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
ஆனால், சர்ச்சைக்குள்ளாகும் பெரும்பாலான வழிபாட்டுத் தலங்கள் இன்று நேற்றல்ல, மாறாக நூறாண்டுகளாக இயங்கி வருகின்றன; எனவே சுமூகமான முறையில் அவற்றை சட்டப்பூர்வமாக்குவதே உரியத் தீர்வாக இருக்குமென்றார் அவர்.
“இந்த கட்டுமானங்கள் பொது அமைதியைக் கெடுக்கும் வண்ணம் இருக்கக் கூடாது; பாதுகாக்கப்பட்ட ஆற்றுப் பகுதிகளை ஆக்கிரமிக்கக் கூடாது; அல்லது சாலைப் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதே முக்கியம்” என DAP தேசியத் துணைத் தலைவருமான ஙா கோர் மிங் கூறினார்.
எந்த இனமோ-சமயமாகவோ இருந்தாலும், சட்ட விதிகளைப் பின்பற்றாமல் வழிபாட்டுத் தலங்கள் கட்டுவதை அரசாங்கம் அனுமதிக்காது என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று கூறியிருந்தார்.
மாறாக, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தைப் பாதுகாக்க ஏதுவாக அனைத்து வழிபாட்டு இல்லங்களும் ஒரே விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றார் அவர்.



