
சென்னை, மார்ச்-30-2026 சட்டமன்றத் தேர்தலில் அனைத்து 234 தொகுதிகளுக்கும் TVK எனப்படும் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கட்சித் தலைவரான நடிகர் விஜய், பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
சென்னையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடந்த வேட்பாளர் அறிமுக நிகழ்வில், தான் போட்டியிடும் தொகுதிகளை அவர் அறிவித்த போது தொண்டர்களின் ஆரவாரத்தால் மண்டபமே அதிர்ந்தது.
முதல் தேர்தலிலேயே எப்படியாவது சட்டமன்றத்திற்குள் நுழைந்து விடும் வேட்கையில், 2 தொகுதிகளில் விஜய் போட்டியிடுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்தியத் தேர்தல் சட்டத்தின் படி, ஒருவர் அதிகபட்சம் 2 தொகுதிகளில் போட்டியிடலாம்; ஒருவேளை இரண்டிலுமே வென்றால், ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டும்.
பெரும்பாலும் பெரிய அரசியல் தலைவர்களே இப்படி 2 தொகுதிகளில் போட்டியிடுவர்.
தமிழகத்தில் இப்படி ஒரே தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றவர் மறைந்த இரும்புப் பெண்மணி ஜெ.ஜெயலலிதா ஆவார்.
1991-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பர்கூர், காங்கேயம் என 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற அவர், பின்னர் காங்கேயன் தொகுதியை ராஜினாமா செய்தார்.
அந்தத் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றிப் பெற்று, முதல் முறையாக அவர் முதல்வரும் ஆனார்.
ஆக, ஜெயலலிதா பாணியில் விஜயும் 2 தொகுதிகளில் வெற்றிக் கனியைப் பறித்து, முதல்வர் நாற்காலியில் அமருவார் என TVK தொண்டர்கள் பெரும் நம்பிக்கையிலும் உற்சாகத்திலும் உள்ளனர்.
தமிழக சட்டமன்றத்திற்கு வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.



