
அலோர் கஜா, ஜூலை 22 – நேற்று, வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் கிலோமீட்டர் 218.3 இல், வேகக் கட்டுப்பாட்டை இழந்து பெண்ணொருவர் ஓட்டி வந்த கார் சறுக்கியதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கெடா லுனாசைச் சார்ந்த 25 வயதான சிதி நூர்தினி அஸாம் கோலாலம்பூரிலிருந்து ஜோகூருக்குப் பயணித்துக் கொண்டிருக்கும்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அவர் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலையின் வலது பக்கத்தில் உள்ள உலோகப் பிரிவில் சறுக்கி விழுந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளதென்று அலோர் கஜா மாவட்ட காவல்துறைத் தலைவர் அஷாரி அபு சாமா தெரிவித்துள்ளார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அலோர் கஜா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றும் இந்த வழக்கு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றதென்றும் அவர் கூறியுள்ளார்.