
குவாந்தான், பிப்ரவரி-25-UMPSA எனப்படும் மலேசிய பஹாங் அல் சுல்தான் அப்துல்லா பல்கலைக்கழக மாணவர் ஒருவர், இஸ்லாமியர்களின் புனித நூலான அல் குர்ஆனை மிதித்த சம்பவம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், அரசாங்கம் அதனைக் கடுமையாக கண்டித்துள்ளது.
இச்செயல் “மிகவும் மோசமானதும், உணர்வில்லாததும்” என சாடிய தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில், தொடர்பு – பல்லூடக ஆணையமான MCMC உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
அல்-குர்ஆனை மிதிக்கும் புகைப்படம் வைரலானதைத் தொடர்ந்து சந்தேக நபர் முன்னதாக குவாந்தானில் கைதுச் செய்யப்பட்டார்.
பின்னர், மாணவர் மன்னிப்பு கேட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
என்றாலும், அவர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, அனைவரும் அமைதியைப் பேணுமாறு கேட்டுக்கொண்ட உயர் கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ சம்ரி அப்துல் காடிர், இவ்விவகாரம் அரசியல் அல்லது பிற நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படாமல் தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இச்செயல் ரமலான் மாதத்தில் முஸ்லீம்களின் உணர்வுகளை புண்படுத்தியதாகக் கூறிய இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான அமைச்சர் சுல்கிஃப்லி ஹசான், சமூக ஒற்றுமையை பேண வேண்டும் என வலியுறுத்தினார்.



