
கோலாலம்பூர், செப்டம்பர் 18 – அடுத்த மாதம் கோலாலம்பூரில் நடைபெறவுள்ள ஆசியான் மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவிருப்பதாக மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.
முன்னதாக உறுதிசெய்யப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன பிரதமர் லி கியாங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பிரிக்ஸ் குழுமத்தின் முக்கிய அங்கமாக இருக்கும் இந்தியாவும் இணையவிருக்கின்றது.
மேலும் ஜப்பான், தென் கொரியா, கனடா, இத்தாலி, ஐரோப்பிய ஒன்றியம், பிரேசில் மற்றும் தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ராமபோசா உள்ளிட்ட தலைவர்களும் இந்த ஆசியான் மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசியான் தனது அடிப்படை கோட்பாடுகளில் உறுதியாக நிலைத்து நிற்க வேண்டும் என்றும், நல்லாட்சி, ஊழல் ஒழிப்பு, அதிகார அத்துமீறல் தடுப்பு ஆகியவற்றில் எந்தவித சமரசமும் செய்யக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்த மாநாடு, அண்மைய காலங்களில் ஆசியான் நடத்தும் மிக முக்கியமான மாநாடுகளில் ஒன்றாகவும், மேலும் உலக தலைவர்களை ஈர்க்கும் நிகழ்வாகவும் கருதப்படுகிறது.