
கோலாலம்பூர், அக்டோபர்-12, கோலாலம்பூரில் பிரபல ஷாப்பிங் தளமாகவும் பொழுதுபோக்கு மையமாகவும் திகழும் புக்கிட் பிந்தாங், ஆசியாவில் மிகைப்படுத்தப்பட்ட (overrated) இடங்களில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
Times of India வெளியிட்ட பட்டியலில் புக்கிட் பிந்தாங் 10-வது இடத்தைப் பிடித்துள்ளது.
அளவுக்கதிகமான நெரிசல், அதிகப்படியான வணிகமயாக்கல் ஆகியவற்றால் களையிழந்துள்ள புக்கிட் பிந்தாங், சுற்றுப்பயணிகளின் எதிர்பார்ப்பையும் பூர்த்திச் செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டது.
ஓயாத போக்குவரத்து நெரிசல், இரைச்சல் போன்றவற்றால், தாங்கள் நாடி வரும் அனுபவத்தை புக்கிட் பிந்தாங் தருவதில்லை என்பதே சுற்றுப் பயணிகளின் முக்கியக் குற்றச்சாட்டாகும்.
அதே சமயம், உணவுப் பொருட்கள், நினைவுச்சின்னங்கள் போன்றவற்றின் விலைவாசியும் கட்டுப்படியாகவில்லை என பலர் ஏமாற்றம் தெரிவித்தனர்.
ஆக, புக்கிட் பிந்தாங் பெயரிலிருக்கும் சிறப்பும் பெருமையும் நேரில் இல்லை என்பதே நிதர்சனம் என சுற்றுப் பயணிகளில் பெரும்பாலோர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இவ்வேளையில் ஆசியாவில் மிகவும் மிகைப்படுத்தப்பட்ட இடமாக தாய்லாந்தின் புக்கெட் நகரம் தேர்வாகியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாமிடம் இந்தோனீசியாவின் பாலி தீவுக்கும், மூன்றாமிடம் சீனப் பெருஞ்சுவருக்கும் கிடைத்துள்ளது.
இந்தியாவின் கோவா கடற்கரை நான்காமிடத்தையும், தாஜ்மஹால் ஒன்பதாவது இடத்தையும் பிடித்துள்ளன.