
வாஷிங்டன், ஜனவரி-17 – வாஷிங்டனில் நடந்த அமெரிக்க செனட் சபை விசாரணை சமூக வலைத் தளங்களில் வைரலாகியுள்ளது.
கருக்கலைப்பு மாத்திரைகள் குறித்த விசாரணையில், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் Josh Hawley, இந்திய வம்சாவளி மகப்பேறு மருத்துவர் Dr நிஷா வர்மாவிடம் ஒரே கேள்வியை 14 முறை கேட்டார்…
“ஆண்கள் கர்ப்பமாக முடியுமா?” என்பதே அவரின் கேள்வியாகும்.
14 முறை அதே கேள்வி கேட்கப்பட்டும், Dr வர்மா அதற்கு நேரடி பதிலளிக்காமல், கேள்வியின் நோக்கத்தை சந்தேகப் பார்வையோடு வெளிப்படுத்தினார்.
நேரடி பதில் வராததால், விசாரணையின் இறுதியில், செனட்டர் Hawley அந்த மருத்துவரை கண்டிக்கும் வகையில் “பெண்களை பெண்களாகவும், ஆண்களை ஆண்களாகவும் ஏற்றுக்கொள்ள மறுப்பது அறிவியலுக்கும், பொது மக்களின் நம்பிக்கைக்கும்…ஏன், பெண்களுக்கான அரசியலமைப்பு பாதுகாப்புகளுக்குமே தீவிரமாகக் கேடு விளைவிக்கும்” எனக் கூறி முடித்தார்.
இந்த பரபரப்பான ‘வாதம்’ இணையத்தில் பரவியதால், பாலின அடையாளம், உயிரியல், மற்றும் இனப்பெருக்க உரிமைகள் குறித்து கடும் விவாதம் எழுந்துள்ளது.
செனட்டர் Hawley-யை ஆதரிப்பவர்கள் அந்த பெண் மருத்துவர் ‘உண்மையைத் தவிர்த்தார்’ எனக் கூற, மற்றவர்களோ அதை நிராகரித்து ‘உண்மையில் அரசியல் வலையில் சிக்குவதிலிருந்து வர்மா தான் தப்பித்தார்’ என வாதிடுகின்றனர்.
அமெரிக்காவில் கருக்கலைப்பு விவாதங்கள் கலாச்சாரப் போராட்டங்களுடன் இணைந்திருப்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது.



