
கூலாய், ஜனவரி-28 – ஜோகூர் பாரு நோக்கிச் செல்லும் ஜோகூர் பாரு – ஆயர் ஹுத்தாம் சாலையின் 25-வது கிலோ மீட்டரில் அம்புலன்ஸ் வண்டியின் வழியை மறித்து, 2 வாகனமோட்டிகள் வைரலாகியுள்ளனர்.
இதையடுத்து அவ்விரு உள்ளூர் ஆடவர்களும் தேடப்படுவதாக, கூலாய் போலீஸ் தலைவர் துணை ஆணையர் Tan Seng Lee கூறினார்.
சம்பவத்தின் போது, அந்த அம்புலன்ஸ் வண்டி அவசர சிகிச்சைக்காக ஜோகூர் பாரு, சுல்தானா அமீனா மருத்துவமனைக்கு நோயாளியை ஏற்றிச் சென்று கொண்டிருந்தது.
அப்போது சாலை நெரிசலில், ஒரு Honda காரும் Exora இரக MPV வாகனமும் அம்புலன்ஸ் வண்டிக்கு வழி விடாமல் நின்று கொண்டிருந்தன.
1 நிமிடம் 26 வினாடி வீடியோவில் அது பதிவாகி வைரலும் ஆகியுள்ளது.
அம்புலன்ஸ் வண்டி, தீயணைப்பு வண்டி, போலீஸ் வாகனம் போன்றவற்றுக்கு வழி விடாமலிருப்பதும் விதிமீறலே என Tan Seng Lee வாகனமோட்டிகளை நினைவுறுத்தினார்.