ஷா ஆலாம், பிப்ரவரி-3 – நாட்டில் 40-க்கும் மேற்பட்ட கோவில்கள் இலக்கவியல் (டிஜிட்டல்) நிர்வாக நடைமுறைக்கு மாறியிருக்கின்றன.
இன்னும் ஏராளமான கோயில்கள் அத்திட்டத்தை முன்னெடுக்க ஆர்வம் காட்டுவது வரவேற்கத்தக்கது என, இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறியுள்ளார்.
நாடு இலக்கவியல் நோக்கி பயணிப்பதை இது புலப்படுத்துகிறது.
ஷா ஆலாம், செக்ஷன் 23-ல் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய இலக்கவியல் நிர்வாக நடைமுறையை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த போது அவர் அவ்வாறு சொன்னார்.
இந்தக் கோவிலில் அறிமுக்கப்படுத்தப்பட்ட இலக்கவியல் நிர்வாக நடைமுறை பூஜைக்கான பொருட்களை விற்க மட்டும் அல்லாது, அர்ச்சனை, உபயம், திருமண முன்னேற்பாடுகள், ஆலய விழாக்களுக்கான நேரடி ஒளிபரப்பு, ஆலயத்தின் வழி நன்கொடை வழங்குதல், நிதி நிர்வாகம், நீர்த்தார் சடங்கு நிர்வாக முறை, என 50-க்கும் மேற்பட்ட டிஜிட்டல் சேவைகளை உள்ளடக்கியுள்ளது.
இதையடுத்து இந்த கோவிலில் இனி இலக்கவியல் முறையிலும் நிர்வாகம் நடைபெறும்.
இதன்வழி கோவிலுக்கு வரும் பக்தர்களும், ஒரே இடத்தில் விரைவாக தங்களுக்கான சேவைகளை, குறித்த நேரத்தில் விரைவாக பெற்றுக் கொள்ளலாம்.
சமயச் சடங்கு தொடர்பான சேவைகளை வழங்குவதோடு மட்டுமல்லாது, சமய பண்பாட்டு நிகழ்ச்சிகளின் விபரங்களையும் விளக்கங்களையும் இந்தச் செயலியின் வழி மக்கள் பெற்றுக் கொள்ளலாம்.
கால மாற்றத்திற்கு ஏற்ப கோவில்களில் இது போன்ற நவீன வசதிகளை அமைத்துக் கொடுப்பது அவசியம் என அமைச்சர் கூறினார்.
முன்னதாக ஆலய மகா கும்பாபிஷேகத்திலும் கோபிந்த் பங்கேற்றார்.
சிலாங்கூர் ஆட்சி குழு உறுப்பினர் வி. பாப்பாராய்டு, கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர், வட்டாரத் தலைவர்கள், பொது மக்கள் என திரளானோர் அதில் கலந்து கொண்டனர்.