இணைய மோசடி: லெம்பா பந்தாய் இந்தியர்களுக்கு IPPTAR நடத்திய விழிப்புணர்வு கருத்தரங்கு

கோலாலம்பூர், நவம்பர் 23-துன் அப்துல் ரசாக் ஒளிபரப்பு மற்றும் தகவல் கழகமான IPPTAR மூலம், தொடர்புத் துறை அமைச்சு, கோலாலாம்பூர் லெம்பா பந்தாய் பகுதியில் உள்ள இந்தியச் சமூகத்தில் இணைய மோசடி விழிப்புணர்வை வலுப்படுத்தியுள்ளது.
அது தொடர்பான நேற்றையக் கருத்தரங்கை, அமைச்சரும் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் அதிகாரப்பூர்வமாக நிறைவுச் செய்து வைத்தார்.
இந்நிகழ்வு, இணைய மோசடிகளை அடையாளம் காண, தவிர்க்க மற்றும் புகாரளிக்க தேவையான நடைமுறை அறிவை வழங்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டதாக ஃபாஹ்மி வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.
இணையக் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இது இரண்டாவது முறையாக நடத்தப்படுவதாக, IPPTAR இயக்குநர் டத்தோ ரொஸ்லான் அரிஃபின் சொன்னார்.
பினாங்கு, பாராட் டாயா போலீஸ் தலைமையகத்தின் வர்த்தகக் குற்றப்புலனாய்வுப் பிரிவு இயக்குநர் ASP தேவன் ராமன், மலேசியத் தொடர்பு – பல்லூடக ஆணையத்தின் துணை இயக்குநர் கதிரவன் ராஜேந்திரன் என, இணையப் பாதுகாப்பு மற்றும் வர்த்தகக் குற்றப் பிரிவில் அனுபவம் வாய்ந்த சொற்பொழிவாளர்கள் கருத்தரங்கை வழிநடத்தினர்.
பி.பி.ஆர் பந்தாய் ரியா, கெரிஞ்சி, ஸ்ரீ பந்தாய் உள்ளிட்ட சுற்று வட்டார குடியிருப்பு திட்டங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து பயனடைந்தனர்.
அவர்களில் சிலர் வணக்கம் மலேசியாவுடன் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.
டிஜிட்டல் அறிவும், இணைய அச்சுறுத்தல்கள் மீதான விழிப்புணர்வும் கொண்ட சமூகத்தை உருவாக்க இதுபோன்ற முயற்சிகள் தொடரப்படுமென, IPPTAR மூலமாக தொடர்பு அமைச்சு தனது கடப்பாட்டை மறுஉறுதிப்படுத்தியது.



