
புக்கிட் ஜாலில், ஆகஸ்ட்-9- நாட்டிலுள்ள இந்திய உள்ளடக்க உருவாக்குநர்கள் மற்றும் டிக் டோக் விற்பனையாளர்களுக்காக, முதன் முறையாக Social Preneurs Summit 2025 அல்லது சமூக முனைவோர் உச்ச நிலை மாநாடு கோலாலம்பூர், புக்கிட் ஜாலிலில் நடைபெற்றது.
அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட டிக் டோக் நேரலை உள்ளடக்க உருவாக்குநர் நிறுவனமான Avision Media இதனை ஏற்பாடு செய்திருந்தது.
MRANTI பூங்காவில் நேற்று ஒருநாள் விழாவாக நடைபெற்ற இந்நிகழ்வை, மித்ரா தலைவரும் பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான பி.பிரபாகரன் தொடக்கி வைத்தார்.
அவர் தமதுரையில், இது போன்ற நிகழ்வுகள் சிறு வியாபாரிகளின் வர்த்தக விரிவாக்கத்திற்கு பெரிதும் துணைபுரியும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.
அடுத்தாண்டு இதை விட பெரிய அளவில் நடத்த Avision Media- வுடன் மித்ரா கை கோர்க்கும் சாத்தியம் குறித்தும் பிரபாகரன் பேசினார்.
முதன் முறையாக நடத்தப்பட்ட போதிலும், 300-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்று பயனடைந்ததாக, ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் Avision Media தலைமை செயலதிகாரியுமான சுரேஷ் தனசேகரன் தெரிவித்தார்.
மலேசிய டிஜிட்டல் உலகின் முன்னோடிகளாகத் திகழும் 15 சாதனையாளர்களும் இந்நிகழ்வில் பங்கேற்று, உள்ளடக்கத் தயாரிப்பு, தொழில் உருமாற்றம், வர்த்த முத்திரையை வலுப்படுத்துவது, டிக் டோக் affiliates வணிகத்தில் வெற்றிப் பெறுவதற்கான இரகசியம் போன்றவற்றை பகிர்ந்துகொண்டனர்.
நாட்டின் முதல் நிலை மின்னியல் தமிழ் ஊடகமான வணக்கம் மலேசியாவின் நிர்வாக இயக்குநர் எம் தியாகராஜனும் அவர்களில் ஒருவர். வளர்ந்து வரும் டிக் டோக் வணிகம் குறித்து அவர் பேசினார்.
சிறு வியாபாரியாகத் தொடங்கி இன்று பெரிய அளவில் வளர்ந்து நிற்கும் Nuetraa நிறுவனத்தின் டத்தின் சுமித்ரா, இதில் பெண்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டுமென்றார்.
டிக் டோக்கிலும் சமூக ஊடகங்களிலும் வணிகம் செய்து இரண்டாவது வருமானத்தை ஈட்டுவதற்கான பல்வேறு விஷயங்களைக் கற்றுக் கொண்டதாக பங்கேற்பாளர்கள் வணக்கம் மலேசியாவிடம் கூறினர்.
டிக் டோக் விற்பனையில் சிறந்து விளங்குபவர்களை அங்கீகரிக்கும் வகையில், முன்னாள் பராலிம்பிக் வீராங்கனை ANANTHY LETCHUMANANக்கு The Most Inspiring Woman என்ற விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.