இந்திய விண்வெளி மையத்தின் புதிய தலைவராக ராக்கெட் விஞ்ஞானி நாராயணன் நியமனம்

புதுடில்லி, ஜன 8 – இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் புதிய தலைவராக ராக்கெட் விஞ்ஞானி வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். விண்வெளி வல்லரசாக இந்தியா செயல்படுவதில் புதிய தலைவர் முக்கிய பங்காற்றுவார் என இந்திய அரசாங்கம் இன்று தெரிவித்தது. 2022 இல் இஸ்ரோவின் தலைவராக பணியாற்றிய S. சோமநாத்திற்கு பதில் நாராயணன் இஸ்ரோவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலட்டுவிளை என்ற கிராமத்தை சேர்ந்த நாராயணன் 1984 ஆம் ஆண்டில் இஸ்ரோவில் சேர்ந்தார். அமைதி மற்றும் கண்டிப்பான விஞ்ஞானி என்பதோடு எந்தவொரு விஷயத்தையும் செய்து முடிப்பதில் சாதனை படைத்தவர் என அவருடன் பணியாற்றிய முன்னாள் சகாக்கள் விவரித்தனர். நாங்கள் சோமநாத்தின் பதவி நீட்டிப்பை எதிர்பார்த்திருந்ததால், இந்த நியமனம் ஆச்சரியமாக இருக்கிறது, ஆனால் நாராயணனின் சாதனைப் பதிவைக் கருத்தில் கொண்டு இந்த தேர்வு அர்த்தமுள்ளதாக இருக்கிறது என்று பெயர் வெளியிட விரும்பாத முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானியும் சக பணியாளருமான ஒருவர் கூறினார். 54ஆண்டுகள் பழமையான விண்வெளி மையத்தை மேலும் அணுகக்கூடியதாக மாற்றியதற்காகவும், அடுத்த தலைமுறையினருடன் ஈடுபட அதைத் திறந்ததற்காகவும் சோம்நாத் பாராட்டப்படுகிறார்.
விண்வெளி பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ள நாராயணன், 2035 ஆம் ஆண்டுக்குள் சொந்த விண்வெளி நிலையத்தை உருவாக்கவும், 2040 ஆம் ஆண்டுக்குள் ஒரு இந்தியரை நிலவில் இறக்கவும் இஸ்ரோ திட்டமிட்டுள்ள நிலையில், அதன் தலைவராக பொறுப்பேற்றுள்ளார். இந்தியாவை லாபகரமான விண்வெளி வல்லரசாக மாற்ற இஸ்ரோவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். மேலும் தனியார் துறையுடன் இணைந்து பணியாற்றவும் இஸ்ரோ முன்வந்துள்ளது. இஸ்ரோவின் துருவ செயற்கைக்கோள் ஏவு வாகனம் போன்ற முக்கிய ராக்கெட் ஏவுதல்களில் நாராயணன் பணிபுரிந்தவர் என்பதோடு இஸ்ரோ நிறுவனத்திற்கு திரவ உந்துவிசை அமைப்புகளை வடிவமைத்து உருவாக்கும் மையத்தையும் அவர் வழிநடத்தியுள்ளார். இம்மாதம் 14 ஆம் தேதி தொடங்கி இரண்டு ஆண்டு காலத்திற்கு அவர் இஸ்ரோவின் தலைவராக பொறுப்பேற்கிறார். சந்திரயான்-2 இன் தோல்வி குறித்து ஆராயும் ஆய்வுக் குழுவின் தலைவராகவும் அவர் இருந்தார்.