
கோத்தா பாரு, டிசம்பர்-15 – கிளந்தானில் 30 வயது பெண் ஒருவர், இரு கணவர்களுடன் வாழ்ந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அப்பெண் 2024 நவம்பரில் தாய்லாந்தின் சொங்க்லாவில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக, அவரது மைத்துனியே கூறியுள்ளார்.
இந்த இரகசியத் திருமணம், கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி வெளிச்சத்துக்கு வந்தது.
அப்போது, அப்பெண் தனது இரண்டாவது கணவரின் வீட்டில், தானா மேராவில் இருப்பதை குடும்பத்தினர் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, கிளந்தான் மத விவகார அதிகாரிகள், நேற்று அப்பெண்ணை விசாரணைக்கு அழைத்து வாக்குமூலம் பதிவுச் செய்தனர்.
இந்நிலையில், மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஸ்ரீ நேன்சி ஷுக்ரி, அப்பெண்ணின் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு, முழு அறிக்கை வந்த பிறகு உதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இரட்டை திருமண குற்றச்சாட்டு காரணமாக, சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.



