இலோன் மாஸ்கிடம் அமெரிக்க டிக் டோக்கை விற்கும் சாத்தியத்தை ஆராயும் சீனா

நியூ யோர்க், ஜனவரி-14 – அமெரிக்கா டிக் டோக் அமெரிக்க மண்ணில் சட்ட சிக்கலைச் சந்தித்துள்ளதால், டிக் டோக் செயல்பாடுகளை உலக மகா கோடீஸ்வரர் இலோன் மாஸ்க்கிற்கு விற்கும் சாத்தியக்கூறுகளை, சீன அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
இலோன் மாஸ்க்கின் சமூக ஊடக நிறுவனமான X தளம், சீனாவின் ByteDance-சிடமிருந்து டிக் டோக்கை வாங்கி, அதை X தளத்துடன் இணைப்பதே அத்திட்டம்.
அச்சாத்தியங்கள் குறித்து பெய்ஜிங்கில் விவாதிக்கப்பட்டு வருவதாக, பெயர் குறிப்பிடாத நபர்களை மேற்கோள் காட்டி, Bloomberg நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், இந்த உத்தேசத் திட்டம் இன்னமும் ஆரம்பக் கட்டத்திலேயே இருப்பதாகவும், அப்படியே இணக்கம் காணப்பட்டாலும், அதனை எப்படி செயல்படுவதுவதென்பது குறித்தும் முடிவு எட்டப்படவில்லை என தெரிகிறது.
இந்நிலையில், தற்போது உலகின் மிகப் பெரிய பணக்காரராக தர வரிசைப்படுத்தப்பட்டிருந்தாலும், இலோன் மாஸ்க் இந்த பரிவர்த்தனையை எவ்வாறு செயல்படுத்த முடியும், அல்லது அவர் மற்ற சொத்துக்களை விற்க வேண்டுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று Bloomberg கூறுகிறது.
சீன அரசாங்கத்தின் அத்திட்டம் குறித்து டிக் டோக்கின் தாய் நிறுவனமான ByteDance-சை கருத்துரைக்க கேட்ட போது, “கற்பனைகளுக்கு நாங்கள் பதிலளிக்க முடியாது” என சுருக்கமாகக் கூறி முடித்துக் கொண்டது.
டிக் டோக் மூலம் அமெரிக்கப் பயனர்களை உளவுப் பார்ப்பதாகவும், தரவுகளைச் சேகரிப்பதாகவும் பெய்ஜிங் மீது குற்றம்சாட்டியுள்ள வாஷிங்டன், ஜனவரி 19-ஆம் தேதிக்குள் தாய் நிறுவனத்திடமிருந்து பிரிந்து வர டிக் டோக்கிற்கு காலக்கெடு விதித்துள்ளது.
அவ்வுத்தரவை எதிர்த்து, அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் டிக் டோக் மேல்முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.