
ஈப்போ, ஏப்ரல்-9-ஈப்போவில் போலிப் பொருட்களின் விற்பனைக்கு எதிராக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சான KPDN அதிரடி நடவடிக்கை மேற்கொண்டதில், 21,415 ரிங்கிட் மதிப்பிலான போலிக் கைப்பேசி உபரிப்பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வணிக முத்திரைக் காப்புரிமையை வைத்துள்ள நிறுவனங்கள் கொடுத்தப் புகாரின் அடிப்படையில், KPDN-மின் பேராக் கிளை நேற்று இச்சோதனையை மேற்கொண்டது.
ஒரு வணிக வளாகத்தில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், பிரபல நிறுவனங்களின் பெயர்களைக் கொண்ட 1,000-க்கும் மேற்பட்ட போலி பேட்டரிகள் மற்றும் கைப்பேசி திரைகள் கண்டறியப்பட்டன.
அவை அனைத்தும் உடனடியாகச் சீல் வைக்கப்பட்டதாக, பேராக் KPDN இயக்குநர் டத்தோ Kamalludin Ismail கூறினார்.
இது குறித்து 2019-ஆம் ஆண்டு வணிக முத்திரை சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், தனிநபர்களுக்கு ஒவ்வொரு போலிப் பொருளுக்கும் தலா 10,000 ரிங்கிட் வரை அபராதமும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.
திரும்பத் திரும்ப அதே குற்றத்தைச் செய்தால், அபராதம் 50,000 ரிங்கிட்டையும், சிறைத்தண்டனை 5 ஆண்டுகளையும் எட்டலாம்.
இதுவே நிறுவனமாக இருந்தால், முதல் குற்றத்திற்கு 15,000 ரிங்கிட்டும், அடுத்தடுத்தக் குற்றங்களுக்கு 30,000 ரிங்கிட்டும் அபராதமும் விதிக்கப்படும்.



