
புத்ராஜெயா, டிசம்பர் 24-கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் அண்மையத் தீர்ப்பு, அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்ட அரச அதிகாரங்களை குறைக்கவில்லை என, தேசிய சட்டத்துறை தலைவர் அலுவலகமான AGC விளக்கம் அளித்துள்ளது.
டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கின் வீட்டுக் காவல் மீதான கூடுதல் அரச உத்தரவு குறித்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து, சில தரப்புகள் அரச அதிகாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தவறாக புரிந்துகொண்டுள்ளனர்.
உண்மையில், அரசியலமைப்பின் 42-வது பிரிவின் கீழ், மாமன்னர், மலாய் ஆட்சியாளர்கள் மற்றும் மாநில ஆளுநர்களுக்கு மன்னிப்பு வழங்கும் முழு அதிகாரமும் தொடர்ந்து நிலைத்திருக்கிறது என AGC சுட்டிக் காட்டியது.
நஜீப்பின் வீட்டுக் காவல் தொடர்பான கூடுதல் உத்தரவு, அரச மன்னிப்பு வாரியத்தில் விவாதிக்கப்படாததால், அதனை சட்டப்பூர்வமாக அமுல்படுத்த முடியாது என்பதே நீதிமன்றத்தின் தீர்ப்பாகும்.
எனவே, இதில் அரச அதிகாரங்கள் பாதிக்கப்பட்டது என்ற பேச்சுக்கே இடமில்லை என, AGC வெளியிட்ட அறிக்கையில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
மன்னிப்பு வழங்க மாமன்னருக்கு இருக்கும் தனியுரிமையை நீதிமன்றம் மதிக்கவில்லை எனக் கூறி, சில அரசியல் கட்சியினர் சாடி வரும் நிலையில் AGC இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளது.



