
கோலாலம்பூர், மார்ச்-8 – மலேசியப் பெண்கள் அனைவருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துகளை ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்று, மார்ச் 8-ஆம் தேதி உலகம் முழுவதும் உலக மகளிர் தினம் கொண்டாடப்படும் நிலையில், இந்திய சமுதாயப் பெண்களின் முன்னேற்றத்திலும் வளர்ச்சியிலும் பெண்கள் ஆற்றிவரும் பங்களிப்பை அவர் பாராட்டினார்.
அரசியல், வர்த்தகம், ஆன்மீகம் மற்றும் தொண்டு உள்ளிட்ட பல துறைகளில் பெண்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக தமிழ்ப் பள்ளிகளில் கல்வி மட்டுமல்லாமல் மாணவர்களின் கலாச்சார அடையாளத்தையும் பாதுகாப்பதில் ஆசிரியைகள் முக்கிய பங்காற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், பள்ளி நிர்வாகம், பெற்றோர்-ஆசிரியர் சங்கங்கள் மற்றும் சமூக நிகழ்வுகளில் பெண்களின் பங்களிப்பு பள்ளிகளின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
விளையாட்டு உள்ளிட்ட பல துறைகளில் பெண்கள் பன்னாட்டு அளவில் சாதித்து நாட்டுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.
இந்தியச் சமுதாயப் பெண்களின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் ம.இ.கா உறுதுணையாக இருந்து வந்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
இந்நிலையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, மலேசியத் தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் வகிக்கும் முக்கிய பங்கை ம.இ.கா பாராட்டி போற்றுவதாக தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.



