உலகக் கிண்ண காற்பந்து போட்டியை புறக்கணிக்க ஈரான் மிரட்டல்

தெஹ்ரான், மார்ச் 11-அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிக்கோவில் நடைபெறவிருக்கும் உலகக் கிண்ண காற்பந்து போட்டியிலிருந்து
விலகிக்கொள்ளப் போவதாக ஈரான் காற்பந்துக் குழு மீண்டும்
மிரட்டல் விடுத்துள்ளது.
உலகக் கிண்ண காற்பந்து போட்டியின் பிரிவுகளின் முதல் ஆட்டம் நடைபெறுவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் இருக்கும் வேளையில் ஈரானின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
அமெரிக்கா மேற்கொண்ட வான்வெளித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவரான அயத்துல்லா அலி காமினி ( Ayatollah Ali Khamenei ) கொல்லப்பட்டதைத் தொடர்ந்து உலகக் கிண்ண காற்பந்து போட்டியை புறக்கணிக்கும் சாத்தியம் இருப்பதாக ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது.
அந்த மேற்காசிய நாட்டை அமெரிக்க ஏவுகணைகள் தொடர்ந்து தாக்குவதால் அங்கு பதற்றம் அதிகரித்து வருவதோடு , இது ஈரானிய அதிகாரிகளுக்கு சினத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வேளையில் ஈரானிய மகளிர் காற்பந்து அணியைச் சேர்ந்த ஐந்து விளையாட்டாளர்களுக்கு ஆஸ்திரேலியா அரசியல் அடைக்கலம் வழங்கியதைத் தொடர்ந்து நிலைமை மேலும் மோசமாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த விவகாரத்தில் தலையிட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. மதிப்புமிக்க உலகக் கிண்ண காற்பந்து போட்டிக்கு ஒரு அணியை அனுப்புமா என்பது குறித்து ஈரானிய காற்பந்து சம்மேளனத்தின் தலைவர் Mehdi Taj சந்தேகம் தெரிவித்துள்ளார்.



