
கோலாலம்பூர், செப்டம்பர்-6 – கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்க ம.சீ.சவின் ஆலோசனை தேவையில்லை; இந்தியச் சமூகத்தின் நலனுக்காக ம.இகா தானாகவே முதிர்ச்சியான முடிவுகளை எடுக்கும் என்கிறார் அதன் பொதுச் செயலாளர் டத்தோ எஸ். ஆனந்தன்.
கூட்டணி பங்காளியாக ம.சீ.சவை மதிக்கிறோம்; ஆனால் ம.இ.காவுக்கு என்று தனி அடையாளம் உள்ளது; எனவே யாரையும் சாராமல் ம.இ.கா சுயமாக முடிவெடுக்கும் எனேறார் அவர்.
பல மாநில ம.இ.கா தொடர்புக் குழுக்கள், தேசிய முன்னணியிலிருந்து விலக அண்மையில் தீர்மானங்களை நிறைவேற்றின.
அதேவேளை, தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரனும், சமூக நலனுக்காக எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக கூறினார்.
ஆனால், ஏறக்குறைய ம.இ.கா போன்றே தேசிய முன்னணியில் ‘வேண்டாத விருந்தாளியாக’ உள்ள ம.சீ.ச மட்டும் “காத்திருந்து பார்ப்போம்” என்ற நிலைப்பாட்டை கடைபிடித்து வருகிறது.
இன்னொரு பக்கம், பாஸ், பெர்சாத்து உள்ளிட்ட கட்சிகள் ம.சீ.ச மற்றும் ம.இ.காவுடன் ஒத்துழைக்கத் தயார் என அறிவித்துள்ளன.
இந்நிலையில் ம.சீ.சவுடன் கலந்தாலோசித்து ம.இ.கா முடிவெடுக்குமா என கேட்டபோது, ஆனந்தன் அவ்வாறு சொன்னார்.
ம.இ.காவின் எதிர்காலம் அக்டோபரில் அதன் பொதுப் பேரவையில் முடிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.