எனக்கு ‘இந்திய மரபணு’ இருக்கிறது – இந்தோனேசிய அதிபர் பிராபோவோ

புது டெல்லி, ஜனவரி-27 – இந்தோனீசிய அதிபர் பிராபோவோ சுபியாந்தோ, தமக்கு ‘இந்திய மரபணு’ இருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சில வாரங்களுக்கு முன் தன்னுடைய மரபணு வரிசை பற்றிய பரிசோதனையை மேற்கொண்ட போது அது தெரிய வந்ததாக, அவர் சொன்னார்.
இந்தியாவின் 76-வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க புது டெல்லி சென்ற பிராபோவோ, அதிபர் மாளிகையில் வழங்கப்பட்ட விருந்தின் போது அவ்வாறு கூறினார்.
அதனால் தான் என்னவோ இந்திய இசையைக் கேட்டதும் தாம் நடனமாடத் தொடங்கி விடுவதாக அவர் சிரித்துக் கொண்டே கூறினார்.
பிராபோவின் அப்பேச்சு அடங்கிய வீடியோவை இந்திய அதிபர் மாளிகை வெளியிட்டுள்ளது.
மேலும் பேசிய அவர், இந்தோனீசியர்களின் அன்றாட வாழ்க்கையில், பழைமை வாய்ந்த இந்திய நாகரீகத்தின் தாக்கம் வலுவாக உள்ளது என்றார்.
“அதுவும் எங்களுடைய மரபியலின் பகுதியாக இருக்கும் என நான் நினைக்கிறேன்” என அதிபர் என்ற முறையில் இந்தியாவுக்கான தனது முதல் பயணத்தில் பிராபோவோ குறிப்பிட்டார்.
அவ்விருந்தில் இந்திய அதிபர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.