
கோலாலம்பூர், ஏப்ரல்-1-நாட்டில் மணிக்கு 600 கிலோ வாட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள், அதாவது மாதத்திற்கு RM215.98-க்கு மேல் கட்டணம் செலுத்தும் வீடுகள் இந்த ஏப்ரல் மாதம் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
TNB, அதன் தானியங்கி எரிபொருள் கணக்கீட்டு முறையான AFA சலுகையை குறைத்துள்ளதே அதற்குக் காரணம்.
அவ்வகையில், மார்ச் மாதத்தில் 1 மணி கிலோவாட்டுக்கு RM0.0215-தாக இருந்த இச்சலுகை, ஏப்ரலில் RM0.0047 ஆகக் குறைகிறது.
உதாரணமாக, மணிக்கு 800 கிலோவாட் பயன்படுத்தும் குடும்பம், ஏப்ரலில் RM329.68-டை கட்டணமாகச் செலுத்த வேண்டும்; இதில் RM3.76 மட்டுமே கழிவுச் சலுகையாகும்.
இதுவே மார்ச் மாதத்தில், அதே குடும்பம் RM17.20 கட்டணக் கழிவுச் சலுகையை அனுபவித்து, RM316.24 மட்டுமே செலுத்தியிருக்கும்.
இந்தச் சலுகைக் குறைப்பு, ஈரான் போரால் உலகளாவிய எரிபொருள் விலை உயர்ந்ததால் ஏற்பட்டுள்ளது.
நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு விலை அதிகரித்துள்ளதால், மலேசியாவின் மின்சார உற்பத்தி செலவுகளும் உயர்ந்துள்ளன.
TNB கணிப்பின்படி, மே மாதத்தில் கட்டணச் சலுகை RM0.039-தாக இருக்கும்; ஜூனில் RM0.091-ராக உயரும்.
ஆனால் ஜூலை மாதத்தில், சலுகை இல்லாமல், RM0.0008 அல்லது 0.08 சென் கூடுதல் கட்டணம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



