
கோலாலம்பூர், செப்டம்பர்-19 – சீன மற்றும் இந்தியச் சமூகங்களைப் பாதிக்கும் பிரச்னைகள் குறிப்பாகக் கல்வி சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்க “உண்மையான மாற்று திட்டங்களை” பெரிக்காத்தான் நேஷனல் முன்வைக்க வேண்டும்.
உரிமைக் கட்சித் தலைவர் பேராசிரிரர் Dr பி. ராமசாமி அதனை வலியுறுத்தியுள்ளார்.
சீனர் மற்றும் இந்தியர்களின் அரசியல் ஆதரவைப் பெற பெரிக்காத்தான் இன்னமும் சிரமப்படுகிறது; ஆனால் அந்த ஆதரவு தானாகவே கிடைக்கும் என கருதி அலட்சியமாக இருக்க முடியாது என, தனது ஃபேஸ்புக் பதிவில், முன்னாள் DAP உறுப்பினருமான அவர் எச்சரித்தார்.
அண்மையில் STPM தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவருக்கு உள்ளூர் பல்கலைக் கழகத்தில் அவர் விரும்பியத் துறையில் இடம் பெறாத சர்ச்சையை ராமசாமி சுட்டிக் காட்டினார்.
இதுபோன்ற “அநீதி” நிலையை பெரிக்காத்தான் கூட்டணிக் கட்சிகள், குறிப்பாக பாஸ் மற்றும் பெர்சாத்து, விமர்சிக்கத் தவறிவிட்டதாக ராமசாமி கூறினார்.
சீனர் மற்றும் இந்தியர்களின் மக்கள் தொகையை சேர்த்தால் அது 40 விழுக்காடாக இருப்பதால், அவர்களின் ஆதரவின்றி பெரிக்காத்தான் புத்ராஜெயாவைக் கைப்பற்ற முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
எனவே, கல்வி துறையில் முன்னேற்றமான சீர்திருத்தங்களை முன்வைத்தால் மட்டுமே அவ்விரண்டு சமூகத்தின் ஆதரவைப் பெற பெரிக்காத்தானுக்கு வாய்ப்புள்ளதாக ராமசாமி கூறினார்.