
ஜோர்ஜ்டவுன், மார்ச்-15 – சுற்றுச்சூழல் மற்றும் சமூகச் சவால்களை எதிர்கொள்ள நிலையான வாழ்க்கை முறைக்கு மாறுவதை விரைவுபடுத்துமாறு, பினாங்கு பயனீட்டாளர் சங்கமான CAP, அரசாங்கம், வணிகங்கள் மற்றும் சமூகத்தை வலியுறுத்தியுள்ளது.
இந்த மாற்றமானது, யாரும் பின்தங்கியிருக்கக் கூடாது என்பதை உறுதிச் செய்வதாகுமென, CAP தலைவர் மொஹிதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.
கழிவுகளைக் குறைத்து உள்ளூர் மற்றும் கரிம விளைபொருட்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நிலையான உணவு முறைக்கு மாறுவதும் அவற்றிலடங்கும் என்றார் அவர்.
மலேசியா ஒவ்வொரு நாளும் 7,000 டன் உணவுக் கழிவுகளை வீசுவதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன; அவற்றில் 4,080 டன் இன்னும் உண்ணக்கூடியவை என்பது கவலைக்குரிய விஷயமாகும்.
எரிசக்தியைப் பொறுத்தவரை, நாட்டின் 90 விழுக்காட்டுக்கும் அதிகமான எரிசக்தி ஆதாரங்கள் இன்னும் புதைபடிவ எரிபொருட்களை நம்பியுள்ளன.
இதனால் பயனீட்டாளர்களுக்கு அதிகச் செலவுகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதகமான விளைவுகள் ஏற்படுகின்றன.
இன்று மார்ச் 15-ஆம் தேதி உலக பயனீட்டாளர் தினம் அனுசரிக்கப்படுவதை ஒட்டி வெளியிட்ட அறிக்கையில், மொஹிதீன் அதனைத் தெரிவித்தார்.
நிலையான வாழ்க்கை முறைகளுக்கு ஒரு சரியான மாற்றம் என்பதுதான் இவ்வாண்டின் கருபொருள்.
உலக பயனீட்டாளர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு பினாங்கில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் ஒரு தொண்டூழிய கல்வி மேம்பாட்டு அமைப்பான ‘சுய மெய்யறிவகம்’ என்ற அமைப்பின் உறுப்பினர்களுக்கு, CAP அதிகாரிகள் ஆற்றல் சேமிப்பு மற்றும் செயல்திறன் திட்டத்தை எப்படி மேற்கொள்வது என்பது பற்றிய ஒரு விளக்க உரைக்கும் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த நிகழ்வில், வீட்டிலேயே எளிதாகச் செயல்படுத்தக்கூடிய நடைமுறை மற்றும் பயனுள்ள ஆற்றல் சேமிப்புக் குறிப்புகள் குறித்து விளக்கப்பட்டது.
சுய மெய்யறிவக பங்கேற்பாளர்கள் தங்கள் ஆற்றல் பயன்பாட்டைக் குறைப்பது, மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பது மற்றும் மிகவும் நிலையான எதிர்காலத்திற்கு பங்களிப்பது எப்படி என்பதையும் கற்றுக்கொண்டனர்.