
புத்ராஜெயா, ஆகஸ்ட்-17- பல மூத்த ஆயுதப்படை அதிகாரிகள் பின்னணியில் இருந்து செயல்பட்ட கடத்தல் கும்பலை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC அண்மையில் முறியடிப்பதற்கு, ஜோகூர் இடைக்கால சுல்தானின் தொடர்புகள் பெரிதும் உதவியுள்ளன.
MACC தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி அவ்வாறு கூறியுள்ளார்.எல்லைகள் வழியான கடத்தலை ஒழிக்க உதவுவதில், துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் தனது முழு ஒத்துழைப்பையும் வழங்கினார்.
TMJ-வின் தொடர்புகளின் மூலமாக MACC-க்கு நிறைய தகவல்கள் கிடைத்ததாக, புத்ராஜெயாவில் லஞ்ச ஒழிப்பு மாணவர் மாநாட்டில் பேசிய போது அசாம் பாக்கி கூறினார்.
கடத்தல் கும்பலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 5 மூத்த ஆயுதப்படை அதிகாரிகள் மற்றும் 2 மின்னியல் ஊடக பத்திரிகையாளர்கள் உட்பட 10 பேரை MACC சமீபத்தில் கைது செய்து தடுத்து வைத்தது.
மற்றவர்கள் ஒரு நிறுவன மேலாளர், மலேசிய மருத்துவ சங்கத்தின் நிர்வாக உதவியாளர் மற்றும் ஒரு இந்தோனேசிய பெண் ஆவர்.
போலீஸ் உதவியுடன் MACC மேற்கொண்ட நடவடிக்கையில் அவர்கள் கிள்ளான் பள்ளத்தாக்கில் கைதுச் செய்யப்பட்டனர்.
மாதந்தோறும் RM5 மில்லியன் மதிப்பில், அண்டை நாடுகளிலிருந்து போதைப்பொருட்கள், சிகரெட்டுகள் உள்ளிட்ட பொருட்களை அக்கும்பல் கடத்தி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
RM63,000 க்கும் அதிகமான ரொக்கம், போதைப்பொருள், எடையிடும் கருவிகள், மதுபானம் மற்றும் போலி துப்பாக்கிகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.