
கோலாலம்பூர், பிப்ரவரி-21 – தேசிய விமான நிறுவனமான மலேசியன் ஏர்லைன்ஸ் கடந்தாண்டு இரத்துச் செய்த விமானங்களின் எண்ணிக்கை 130 விழுக்காடு அதிகரித்துள்ளது.
2023-ஆம் ஆண்டில் 3,612 விமானச் சேவைகள் இரத்துச் செய்யப்பட்ட வேளை, கடந்தாண்டு மொத்தமாக 8,319 விமானங்களை அது இரத்துச் செய்ததாக, போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.
இவ்வேளையில், கடந்தாண்டு 7,330 மலேசியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் தாமதமடைந்தன; 2023-ஆம் ஆண்டைக் காட்டிலும் இது 3 விழுக்காடு சரிவாகுமென, மக்களவையில் அவர் சொன்னார்.
மலிவுக் கட்டண விமான நிறுவனமான ஏர் ஏசியாவை எடுத்துக் கொண்டால், கடந்தாண்டு அது இரத்துச் செய்த விமானங்களின் எண்ணிக்கை 23 விழுக்காடுக் குறைந்துள்ளது.
2023-ல் 39,884 ஏர் ஏசியா விமானச் சேவைகள் இரத்துச் செய்யப்பட்ட நிலையில், கடந்தாண்டு 30,840 விமானங்கள் மட்டுமே இரத்துச் செய்யப்பட்டன.
தாமதமான விமானங்களின் எண்ணிக்கையும் 7 விழுக்காடு சரிந்துள்ளது; 2023-ல் 20,274 விமானங்கள் தாமதமான நிலையில், கடந்தாண்டு அவ்வெண்ணிக்கை 18,825-தாக மட்டுமே பதிவாகியது.
புகார்களைப் பார்த்தால், கடந்தாண்டு மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு 410 புகார்களும், ஏர் ஏசியாவுக்கு 569 புகார்களும் கிடைக்கப்பெற்றன.
உள்நாட்டு விமானப் பயணங்களுக்கான சராசரி டிக்கெட் விலை கடந்தாண்டு 227 ரிங்கிட்டாகவும், ஆசியான் நாடுகளுக்கான டிக்கெட் விலை 358 ரிங்கிட்டாகவும், அனைத்துலகப் பயணங்களுக்கான டிக்கெட் விலை 1,273 ரிங்கிட்டாகவும் பதிவாகியிருப்பதாகவும் அந்தோனி லோக் கூறினார்.