Latestமலேசியா

கம்போங் சுங்கை பாரு மறுமேம்பாட்டுத் திட்டம்; நில உரிமையாளர்களுக்கு RM62 மில்லியன் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது

புத்ராஜெயா, செப்டம்பர்-13 – கோலாலம்பூர், கம்போங் சுங்கை பாரு மறுமேம்பாட்டுத் திட்டத்தில் பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு இதுவரை மொத்தம் RM62.57 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

1960 நில கையகப்படுத்தல் சட்டத்தின் முதல் அட்டவணையின் படி, நிலம் மற்றும் சுரங்கங்களுக்கான கூட்டரசு பிரதேச இயக்குநர் அலுவலகம் இந்தத் தொகையை நிர்ணயித்ததாக, PKB எனப்படும் கம்போங் பாரு மேம்பாட்டுக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Dr கைருல் நிசாம் ஒத்மான் (Khairul Nizam Othman) தெரிவித்தார்.

இழப்பீடு சொத்து மதிப்பு, பராமரிப்பு அல்லது மேம்பாட்டு செலவுகள், இடமாற்றச் செலவுகள், தற்காலிக வாடகைச் செலவுகள், வருமான இழப்பு, விசாரணை வருகை செலவுகள், மதிப்பீட்டு கட்டணம் உள்ளிட்ட பல கூறுகளை அது உள்ளடக்கியது.

நிலம் கையகப்படுத்துதலால் பாதிக்கப்பட்ட பட்டா உரிமையாளர்களுக்கு நியாயமான விலையில் மாற்று வீடு வாங்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.

இதில் RM300,000 மதிப்புள்ள 900 சதுர அடி யூனிட்டும் அடங்கும்; அதை அவர்கள் பெற்ற இழப்பீட்டின் பாதி விலையில் வாங்கலாம்.

தற்போதைய நிலவரப்படி, 328 சொத்து உரிமையாளர்களில் 72 விழுக்காட்டினர் அல்லது 236 பேர் மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளனர்.
மீதமுள்ள 28 விழுக்காட்டினர் இழப்பீட்டு தொகை மீதான அதிருப்தியால் அதை தொடர்ந்து நிராகரித்து வருகின்றனர்.

இந்தச் சலுகையை ஏற்றுக்கொள்பவர்களுக்கு RM1 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்தை சொந்தமாக்குவதற்கான வாய்ப்பையும் இது வழங்குகிறது, சிலர் ஏற்கனவே RM1 மில்லியனுக்கும் அதிகமான இழப்பீட்டைப் பெற்றுள்ளதாகவும் கைருல் நிசாம் கூறினார்.

இதனிடையே, அங்குள்ள குடியிருப்புகளை காலிச் செய்ய புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது கலவரத்தில் இறங்கிய 7 ஆடவர்களைப் போலீஸ் கைதுச் செய்துள்ளது.

கற்கள் வீசப்பட்டு டாங் வாங்கி போலீஸ் தலைவருக்குத் தலையில் இரத்தக் காயம் ஏற்படும் அளவுக்கு சினமூட்டுதலில் இறங்கியதாக, 15 முதல் 52 வயது அந்நபர்கள் கைதாகினர்.

அவர்களில் ஒருவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு 1,500 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டார்.

எஞ்சிய 6 பேரும் மேல் விசாரணைக்காகக் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, கோலாலம்பூர் போலீஸ் தலைவர் ஃபாடில் மார்சுஸ் (Fadil Marsus) கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!