வால்டிவோஸ்தோக், செப்டம்பர் -5 – காசா முனையில் வன்முறை மற்றும் கொடூரத் தாக்குதல்களை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டுமன மலேசியாவும் ரஷ்யாவும் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளன.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதனைத் தெரிவித்துள்ளார்.
காசாவில் அந்த யூத நாட்டின் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்துலச் சமூகம் தனது அழுத்தத்தை அதிகரிக்க வேண்டுமென்பதிலும், அதிபர் விளாடிமிர் புடினும் (Vladimir Putin) தாமும் உறுதியாக இருப்பதாக அன்வார் கூறினார்.
9-வது கிழக்குப் பொருளாதார நாடுகளின் ஆய்வரங்கிற்கு வெளியே புடினுடன் இரு தரப்பு சந்திப்பை நடத்திய போது அன்வார் அவ்வாறு கூறினார்.
இவ்வேளையில், மனிதநேய உதவிகளையும் உணவுப் பொருட்களையும் மருந்துகளையும் காசாவுக்கு அனுப்ப எகிப்து அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகளை மலேசியா மதிக்கிறது.
எகிப்து மீது இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹு அடுக்கிய சரமாரியான குற்றச்சாட்டுக்கு பதிலடியாக டத்தோ ஸ்ரீ அன்வார் அவ்வாறு சொன்னார்.
எகிப்திய அரசு, தனது எல்லை வாயிலாக ஹமாஸ் படைக்கு ஆயுதங்களை கடத்துவதாக நேட்டன்யாஹூ முன்னதாக குற்றம் சாட்டியிருந்தார்.
நேட்டன்யாஹூவின் குற்றச்சாட்டு, காசாவில் போர் நிறுத்தத்தை கொண்டு வரவும் கைதிகளைப் பரிமாற்றிக் கொள்ளவும் மேற்கொள்ளப்படும் மத்தியஸ்த முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை விளைவிக்கும் நோக்கத்தைக் கொண்டது என, எகிப்து வெளியுறவு அமைச்சு சாடியது.
ஜோர்டான், பாலஸ்தீனம், கட்டார், குவைத் ஆகிய நாடுகளும் இஸ்ரேலின் குற்றச்சாட்டை சாடியிருந்தன.