
காஜங் தமிழ்ப் பள்ளியில் திறன்மிகு மாணவர் விருதுவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் அறங்காவலரும் மஹிமா தலவருமான டத்தோ ந. சிவக்குமார் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
காலை 8 மணி முதல் நண்பர் மணி 12 வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இப்பள்ளியில் பயிலும் 836 மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அதீத தேர்ச்சி அடைவு நிலை விருதை படிநிலை 1 க்கான ஆறு மாணவர்களும் , படிநிலை 2க்கான மேலும் ஆறு மாணவர்களும் பெற்றனர்.
மேலும் ஆண்டு வாரியான சிறந்த அடைவு நிலை அடைந்த மாணவர்கள், சிறந்த வகுப்பு தேர்ச்சி நிலை மற்றும் கருவூல தொலைக்காட்சி பொறுப்பு மாணவருக்கும் பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
அதோடு மாணவர் நலப் பிரிவு, முழு வருகை, முதல் வகுப்பு முதல் ஆறாம் வகுப்புவரையிலான மாணவர்களுக்கான சிறந்த பண்பாளர் விருது, நல்லாளுமை தூதுவர் உட்பட பல்வேறு விருதுகளும் மாணவர்களுக்கு டத்தோ சிவக்குமார் வழங்கினார்.
பள்ளிப் பாடங்களில் மட்டுமின்றி புறப்பாட நடவடிக்கைகளிலும் சிறந்து விளங்கும் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களை சிறப்பிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாக பள்ளியின் துணைத் தலைமை ஆசிரியர் திருமதி புவனேஸ்வரி நாகப்பன் தெரிவித்தார்.
காஜாங் தமிழ்ப் பள்ளியின் மாணவர் விருது விழாவில் மாணவர்கள் படைத்த பல நிகழ்ச்சிகளும் மேலும் சிறப்பு சேர்த்தன.
மொத்தத்தில் இந்த நிகழ்ச்சி மாணவர்களுக்கு மறக்க முடியாத நிகழ்ச்சியாக அமைந்ததோடு கல்வியில் சிறந்த அடைவு நிலையை ஏற்படுத்த வேண்டும் என்ற உற்சாகத்தையும் அவர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.



