
கோலாலம்பூர், செப்டம்பர்-5 – மலேசியாவில் 3 மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன பிரிட்டன் வாலிபன் டேவிட் பாலிசோங் (David Balisong) கோலாலம்பூரில் பாதுகாப்பாக மீட்கப்பட்டான்.
ஜாலான் புடு ஹோட்டலில் நேற்றிரவு 7 மணி வாக்கில், போலீஸ் குழு 17 வயது டேவிட்டை கண்டதாக, கோலாலம்பூர் போலீஸ் தலைவர் Fadil Marcus கூறினார்.
அவ்விளைஞனின் உடல்நலம் உள்ளிட்ட மற்ற விபரங்கள் அனைத்தும் விசாரணைக்குப் பிறகு தெரிவிக்கப்படும் என்றார் அவர்.
A Level மாணவனான டேவிட் வீட்டில் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஜூன் 6-ஆம் தேதி Greater Manchester-ரிலிருந்து தனியாளாக கோலாலம்பூர் வந்திறங்கினான்.
இங்கு வந்ததும் கைப்பேசியை அடைத்துப் போட்டு விட்டு, மின்னஞ்சல்களையும் பார்க்காமல் புறக்கணித்து வந்தான்.
மலேசியா வந்த 3-ஆவது நாளில் மட்டும் ஒரேயொரு முறை தனது தாயாருக்கு மின்னஞ்சல் அனுப்பி, அதில் தன்னைப் பற்றி கவலைப் பட வேண்டாம் என்றும், தேடுவதை நிறுத்துமாறும் அவன் கேட்டுக் கொண்டான்.
தனது செயலுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டதோடு, குடும்பத்தார் நலமுடன் இருக்குமாறும் வாழ்த்தி மின்னஞ்சலை அவன் முடித்துக் கொண்டான்.
அன்றிலிருந்து மலேசியப் போலீஸ் அவனை இங்கு ‘வலைப்’ போட்டு தேடி வந்தது.