
ஜோகூர் பாரு, ஜன 2 – காப்புறுதி பணத்தை பெறுவதற்காக கணவரை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்ட மனைவியும் அவரது காதலனும் கைது செய்யப்பட்டனர்.
இந்த கொலை முயற்சி நடந்த மறுநாள் அதாவது டிசம்பர் 22 ஆம்தேதியன்று அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக Seri Alam மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் முகமட் சொஹாய்மி இஷாக் ( Mohd Sohaimi Ishak ) தெரிவித்தார்.
47 வயது நபர் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது முகத்தை தலையணையால் அழுத்திக் கொல்ல ஆடவன் ஒருவன் முயன்றுள்ளதோடு அதற்கு உடந்தையாக இருந்த மனைவி தனது காதலனை வீட்டிற்குள் நுழைய அனுமதித்ததும் விசாரணையில் கண்டறியப்பட்டதாக Mohd Sohaimi கூறினார்.
மேலும் கணவரின் கால்களைப் பிடித்துக்கொண்டு, தனது காதலன் முகத்தை மறைக்கும் முயற்சியிலும் அப்பெண் ஈடுபட்டுள்ளார்.
எனினும் பாதிக்கப்பட்ட நபர் கடுமையாக போராடி உயிர் தப்பினார். அதே வேளையில் சந்தேக நபரான அப்பெண்ணின் காதலன் சம்பவம் நடந்த நாளில் தப்பியோடியபோதிலும் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன் தனது கணவரின் காப்புறுதி பணம் குறித்து அப்பெண் அடிக்கடி வினவிவந்ததாக விசாரணையில் தெரியவந்தது.
இந்த விவகாரம் தொடர்பில் கொலை முயற்சிக்கான தண்டனைச் சட்டத்தின் 307 ஆவது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டதோடு , அதன் ஆவணங்கள் முடிந்த நிலையில் ஜோகூர் மாநில குற்றச்சாட்டுப் பிரிவின் இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட இருவருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு கொண்டுவருவதற்கும் அனுமதி பெறப்பட்டுள்ளதாக Mohd Sohaimi குறிப்பிட்டார்.



