
கோலாலம்பூர், ஜனவரி-28 – தற்போதையச் சவால்களை மேலும் சிறப்பாக எதிர்கொள்ள ஏதுவாக, காலத்திற்கு ஒவ்வாத குற்றத் தடுப்புச் சட்டங்கள் சிலவற்றை மதிப்பாய்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாக, புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை கருதுகிறது.
உள்துறை அமைச்சால் மறு ஆய்வுக்கு முன்மொழியப்படும் சட்டங்களில் சூதாட்டம், விபச்சாரம் மற்றும் வாகனத் திருட்டு ஆகியவற்றில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கான தண்டனைகளையும் உட்படுத்தியிருப்பதாக, அத்துறையின் இயக்குனர் டத்தோஸ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் ஜைன் (Datuk Seri Mohd Shuhaily Mohd Zain) கூறினார்.
குற்றவாளிகளின் யுக்திகள் அடுத்தக் கட்டத்திற்குச் சென்று விட்ட நிலையில், இன்றையத் தேதிக்கு மேற்கண்ட சட்டங்கள் பொருத்தமற்றதாகவோ அல்லது மிகவும் மென்மையாகவோ பார்க்கப்படுகின்றன என்றார் அவர்.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக சூதாட்டம் மற்றும் விபச்சாரம் போன்ற குற்றங்கள் ‘அதிநவீனமாக’ வளர்ந்துள்ளன.
உதாரணமாக, விபச்சார கும்பல்கள் இப்போதெல்லாம் ஒரு நிலையான இடத்திலிருந்து செயல்படுவதில்லை; முன்பதிவுகள் கூட தொலைபேசி மூலம் செய்யப்படுகின்றன; கட்டணமும் இணையம் வாயிலாகவே மாற்றப்படுகிறது.
தவிர, ஒரு விலைமாது கைதுச் செய்யப்பட்டால், அந்த ஒழுங்கீனச் செயல் இருவரின் சம்மதத்துடனேயே நடக்கிறது என்றும் அதில் பணப்பரிவர்த்தனை இல்லை என்றும் கூறி தப்பித்துக் கொள்ள வாய்ப்புண்டு.
ஆக, அதில் பாதிக்கப்பட்டவர் யார் என்பதை அடையாளம் காண முடியாததால் யாரையும் கைதுச் செய்ய முடியாமல் போவதாக டத்தோஸ்ரீ முகமட் ஷுஹைலி கூறினார்.
எனவே, காலத்திற்கேற்ற வகையில் சட்டங்களைப் புதுப்பிக்க நேரம் வந்து விட்டதாக, புக்கிட் அமானில் பத்திரிகையாளர்களுடனான சிறப்புச் சந்திப்பின் போது அவர் சொன்னார்.