
பத்து காஜா, மே 6- கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி, பத்து காஜா கிந்தா வேலி தோட்டத் தமிழ்ப்பள்ளியின், 52-ஆம் ஆண்டு பள்ளித் திடல்தட விளையாட்டுப் போட்டி, மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பள்ளி விளையாட்டுப் போட்டியை, துவாலாங் செக்கா சட்டமன்ற உறுப்பினர் YB துவான் முகமது அஸ்லான் எல்மியின் சிறப்பு அதிகாரி தொடக்கி வைத்து, 2000.00 ரிங்கிட் நன்கொடையையும் வழங்கினார். மேலும், இந்நிகழ்வில் தென்கிந்தா மாவட்ட துணைக் கல்வி அதிகாரியும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
தொடர்ந்து, இவ்விளையாட்டுப் போட்டியில், மாணவன் சர்வினேசன் தனபாலசிங்கம் சிறந்த விளையாட்டு வீரனாகவும், மாணவி வினோதினி கோபிநாதன் சிறந்த விளையாட்டு வீராங்கனையாகவும் தேர்ந்தெடுக்கப்படனர். மேலும், ஒட்டு மொத்த நிலையில் அதிக புள்ளிகளைப் பெற்று சிவப்பு இல்லம் முதல் நிலையிலும் இரண்டாம் மூன்றாம் நிலையில் மஞ்சள், நீலம் இல்லங்களும் வெற்றி பெற்றன.
இந்நிகழ்வுக்குப் பின்னர், இரண்டாவது பள்ளி மலர் ‘சிகரம்’ என்ற பெயரில் திரு. ஜெய்கிஷன் சரவணன் (ஜே.கே. பில்டர்ஸ் & இஞ்சினியரிங் தலைமை நிர்வாகி) அவர்களால் வெளியீடு செய்யப்பட்டது. அவர் முதல் பிரதியை 1500.00 ரிங்கிட் கொடுத்து வாங்கியதோடு, மலர் வெளியீட்டின் மொத்தச் செலவினையும் ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிகரம் மலரின் விற்பனையிலிருந்து வரும் வருமானத்தை பெற்றோர் ஆசிரியர் சங்கம் மணவர்களின் கல்வி நல மேம்பாட்டு திட்டங்களுக்குப் பயன்படுத்த முடிவெடுத்துள்ளது.
இவ்விரண்டு நிகழ்வுகளும், தலைமையாசிரியர் திருமதி லோகேஸ்வரி ஆறுமுகத்தின் அருமையான வழிகாட்டலிலும், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களின் ஒத்துழைப்பாலும் சிறப்புடன் நடைபெற்றன.
இறுதியாக தலைமையாசிரியர், அவ்வட்டார மக்கள், தங்களின் பிள்ளைகளைத் தமிழ்ப் பள்ளியில் பதிய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். தமிழ்ப் பள்ளியே நமது தேர்வு!