
கிள்ளான், மார்ச்-17 – கிள்ளான், தாமான் செந்தோசாவில் நேற்று முன்தினம் நிகழ்ந்த சண்டையில் இரு உள்ளூர் ஆடவர்கள் வெட்டிக் கொல்லப்பட்டனர்.
அச்சம்பவம் குறித்து இரவு 10.50 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக, தென் கிள்ளான் போலீஸ் தலைவர் துணை ஆணையர் Cha Hoong Fong கூறினார்.
தாமான் செந்தோசா, ஜாலான் ஹுலு பாலாங்கில் உள்ள வணிக வளாகத்தில் அச்சம்பவம் நடந்துள்ளது.
5 கார்களில் வந்திறங்கிய சந்தேக நபர்கள் இருவரை சரமாரியாக வெட்டினர்.
ஒருவர் அங்கிருந்து தப்பியோடும் முயற்சியில் 50 மீட்டர் தொலைவில் இன்னொரு கடையில் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
இன்னொருவர் பக்கத்திலுள்ள தனியார் கிளினிக் கொண்டுச் செல்லப்படும் வழியில் மரணமடைந்தார்.
அவர்கள் முறையே 36, 38 வயதிலானவர்கள்; இருவருக்குமே தலா ஒரு பழையக் குற்றப்பதிவு உள்ளது.
இதையடுத்து கொலைக்குற்றங்களை விசாரிக்கும் குற்றவியல் சட்டத்தின் 302-ஆவது பிரிவின் கீழ் இச்சம்பவம் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
அச்சண்டையில் குண்டர் கும்பலின் பங்கேற்பு இருந்ததா என்பதும் விசாரிக்கப்படுகிறது.
கொல்லப்பட்ட இருவரின் சடலங்களும் சவப்பரிசோதனைக்காக கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.
தப்பியோடியக் கொலைக்கார கும்பலை போலீஸ் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் வாசாரணைக்கு உதவ முன்வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.