
கோலாலாம்பூர், டிசம்பர்-8 – கும்பாபிஷேக நிகழ்வில் மலேசிய குருக்கள் மட்டுமே பங்கேற்க வேண்டுமென்ற பேராக் ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ A. சிவநேசனின் பரிந்துரைக்கு, MAHIMA எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
உள்ளூர் ஆட்களுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டுமென்ற சிவநேசனின் நோக்கம் நல்லது தான்…ஆனால், மலேசியாவில் அனுபவமுள்ள குருக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் இந்த பரிந்துரை நடைமுறைக்கு ஏற்றதல்ல என, அந்த மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையின் தலைவர் டத்தோ N.சிவகுமார் கூறினார்.
கோவில்கள் ஒருபோதும் உள்ளூர் குருக்களின் பங்கேற்பை தடைச் செய்யவில்லை, மாறாக ஊக்குவிக்கின்றன; ஆனால் பெரிய நிகழ்வுகளுக்கு அனுபவம் வாய்ந்த வெளிநாட்டு குருக்கள் தேவைப்படுகின்றனர்.
கும்பாபிஷேகம் போன்ற பெரிய நிகழ்வுகளைக் கையாளும் அனுபவம் வாய்ந்த குருக்கள்களை உள்ளூரில் உருவாக்குவது எளிதான காரியமல்ல; அதற்கு ஒரு நீண்ட கால அவகாசம் தேவைப்படுவதாக சிவகுமார் சொன்னார்.
இவ்வேளையில், சிவநேசனின் மற்றொரு பரிந்துரையான குருக்கள் சங்கம் போன்ற மூன்றாம் தரப்பினரின் தலையீடு உண்மையில் செலவினத்தை அதிகரிக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.
கும்பாபிஷேகத்தின் முழுச் செலவும் கோயில்களுடையது என்பதால், நிர்வாகத்தில் அவசியமில்லாத குருக்கள் சங்கங்களின் ஈடுபாட்டால், கோயில் நிர்வாகங்களுக்குத் தான் வீண் செலவு என்றார் அவர்.
எனவே, இந்த குருக்கள் விவகாரத்தை விட்டு விட்டு, சிவநேசன், கோயில் நிலம், கோவில் பதிவு மற்றும் அடிப்படை வசதிகள் போன்ற முக்கிய பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும் என சிவகுமார் வலியுறுத்தினார்.



