Latestமலேசியா

குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு ஒரு தேசிய அவசர நிலையாகும்; சார்ல்ஸ் சாந்தியாகோ எச்சரிக்கை

கோலாலம்பூர், பிப்ரவரி-3-மலேசியாவில் குழந்தைகளின் வளர்ச்சி குறைபாடு அதிகரித்து வருவது குறித்து கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சாந்தியாகோ எச்சரித்துள்ளார்.

இது ஒரு மருத்துவ பிரச்னை அல்ல, மாறாக ஆட்சியின் தோல்வி என்றார் அவர்.

உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரங்களின் படி, 2000-ஆம் ஆண்டில் 20 விழுக்காடாக இருந்த குழந்தை வளர்ச்சி குறைபாடு, இன்று 24 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

ஆனால், ஏறக்குறைய மலேசியாவைப் போன்றே பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட மற்ற சில நாடுகள், அதனை 10 விழுக்காட்டுக்கும் குறைவாகக் குறைத்துள்ளன.

இவ்விஷயத்தில் நாம் பின்தங்கிய நாடாக மாறியுள்ளதை இந்த ஒப்பீடே புலப்படுத்துவதாக சார்ல்ஸ் சொன்னார்.

அரசாங்கம், பெரும் திட்டங்கள் மற்றும் நிறுவன மீட்புகளுக்கு பில்லியன் கணக்கில் பணத்தைச் செலவழிக்கிறது… ஆனால், குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்தை கண்டுகொள்வதில்லை என்றார் அவர்.

இந்த வளர்ச்சி குறைபாடு, கல்வி அடைநிலைகள், வேலைத் திறன், சுகாதாரச் செலவுகள் மற்றும் தேசிய நிலைத்தன்மை ஆகியவற்றை பாதிக்கும் அபாயம் உள்ளது.

குறிப்பாக, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள், அகதிகள், புலம்பெயர்ந்த மக்கள், நாடற்றவர்கள், பூர்வக் குடியினர், நகர்ப்புற ஏழைகள் உள்ளிட்டோர் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

எனவே, இதை தேசிய அவசர நிலையாக கருதி, அரசாங்கம் உடனடியாக ஊட்டச்சத்து திட்டங்கள், தாய்மார் சுகாதார மேம்பாடு, மற்றும் உணவு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

“வளர்ச்சி குறைபாடு கொண்ட தலைமுறை உருவானால், அது நாட்டின் அடித்தளத்தையே பலவீனப்படுத்தும்” என, ஃபேஸ்புக் பதிவில் சார்ல்ஸ் சாந்தியாகோ எச்சரித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!